பொதுப்பாயிரம்

நூலினது வரலாறு
காண்டிகை உரை இன்னது என்பது

 
22கருத்துப் பதப்பொருள் காட்டு மூன்றினும்*
அவற்றொடு வினாவிடை யாக்க லானுஞ்
சூத்திரத் துட்பொரு டோற்றுவ காண்டிகை .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
கருத்துப் பதப்பொருள் காட்டு மூன்றினும் - கருத்துரையும் பதவுரையும் உதாரணமுமாகிய மூன்றனையும் சொல்லுதலாலும் , அவற்றோடு வினா விடை ஆக்கலானும் - அம் மூன்றனோடு வினா விடை என்னும் இரண்டனையுங் கூட்டிச் சொல்லுதலாலும் , சூத்திரத்துள் பொருள் தோற்றுவ காண்டிகை - சூத்திரத்துள் இருக்கின்ற பொருளை விளக்குவன காண்டிகை உரையாம் .


* மூன்றினும் எனப் பிரித்துக் கூறியது வினா விடை இன்றியும் காண்டிகை உரை வழங்கும் என்று உய்த்து உணர்தல் பொருட்டு .