பெயரியல்

வேற்றுமை
கண் முதலிய உருபுகள்

 
302கண்கால் கடையிடை தலைவாய் திசைவயின்
முன்சார் வலமிட மேல்கீழ் புடைமுதல்
பின்பா டளைதே முழைவழி யுழியுளி
உள்ளகம் புறமில் லிடப்பொரு ளுருபே .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
கண் ... இல் = கண் முதலாக இல் ஈறாகச் சொல்லப்பட்ட இவ் இருபத்தெட்டும் , இடப்பொருள் உருபு = தம்மை ஏற்ற பெயர்ப்பொருளை இடப்பொருளாக வேற்றுமைசெய்யும் உருபுகளாம் .

கண் ஒழிந்த உருபுகளுக்கு உதாரணம்

கால் - " ஊர்க்கால் நிவந்த பொதும்பர் ."
கடை - "வேலின்கடை மணிபோல் திண்ணியான்"
இடை - "நல்லாரிடைப் புக்கு "
தலை -" வலைத்தலை மான் அன்ன நோக்கியர் "
வாய் - " குரை கடல் வாய் அமுதென்கோ "
திசை - "தேர்த்திசை இருந்தான்
வயின் - "அவர்வயின் செல்வாய்
முன் - "கற்றார் முன் தோன்றா கழிவிரக்கம்
சார் - "காட்டுச்சாரோடுங் குறுமுயால்
வலம் - " கைவலத்துள்ளது கொடுக்கும்
இடம் - "இல்லிடப்பரத்தை
மேல் - "தன்மேல் கடுவரை நீரிற் கடுத்து வரக் கண்டும் " [ கடுப்பு - விரைவு ]
கீழ் - " பிண்டிக் கண்ணார் நிழற் கீழ் எந்தம் அடிகள்
புடை - "எயிற்புடை நின்றான்"
முதல் - "சுரன்முதல் வந்த வுரன்மாய் மாலை " [ சுரன் - பாலை நிலம் . ]
பின் - " காதலிபின் சென்றதம்ம
பாடு - " நம்பாடு அணையாத நாள் "
அளை-"கல்லளைச்சுனைநீர் '
தேம் - தோழிக்குரியவைகோடாய்தேத்து " [ கோடாய் = கைத்தாய் , ]
உழை - "அவனுழைவந்தான்
வழி - "நின்றதோர் நறவேங்கை நிழல்வழி யசைந்தன்ன"
உழி - "உறைப்புழியோலைபோல
உளி - "குயில்சேர்குளிர் காவுளிசேர் புறையும்
உள் - " முல்லையங்குவட்டுள் வாழும்
"அகம் - பயன்சாராப் பண்பில்சொற் பல்லாரகத்து
புறம் - "செல்லுமென்னுயிர்ப் புறத்திறுத்த மருண்மாலை"
இல் - "ஊரிலிருந்தார் "

இனிக் கண் கான் முதலியன , இடவேறுபாடுகளை உணர்த்தும்போது ஒரு திறத்தனவாகிய உருபாகாது , பல திறத்தனவாகிய இடங்களை உணர்த்தும் பெயர்களாம் .

கண்ணகன் ஞாலம் , அகத்திலிருந்தான் ,வீட்டின் புறத்திலிருந்தான் , மேலிடத்திருந்தான் , முன்னிருந்தான் , கடை நாள் , இடைச்சுரம் , தலையாயார் , தென்றிசை என வரும் , பிறவுமன்ன .