வினையியல்

முற்றுவினை
வியங்கோள் வினைமுற்று

 
338கயவொடு ரவ்வொற் றீற்ற வியங்கோள்
இயலு மிடம்பா லெங்கு மென்ப.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
க , ய வொடு ரவ்வொற்று ஈற்ற வியங்கோள் = க , ய என்னும் இரண்டு உயிர்மெய்யினையும் ரகர மெய்யினையும் இறுதியில் உடைய மொழிகள் வியங்கோள் முற்றுக்களாம் ; இடம் பால் எங்கும் இயலும் என்ப = அவை மூன்றிடங்களிலும் ஐம்பால்களிலும் செல்லும் என்று சொல்லுவர் புலவர்.
வாழ்கஉண்கஆடுகயான், யாம், நீ, நீர் , அவன், அவள், அவர் , அது, அவை.
வாழியஉண்ணியஆடிய
வாழியர்உண்ணியர்ஆடியர்

உரையிற் கோடல் என்னும் உத்தியால், " நான்மறை யறங்களோங்க நற்றவம் வேள்வி மல்க," "மக்கட் பதடியெனல்," "மனத்துக்கண் மாசிலானாதல்" என அ, அல், தல் என்பனவும் வியங்கோள் விகுதிகளாய் வரும் எனக் கொள்க.

வியங்கோள் வினைமுற்று: "ஆறிரு தடந்தோள் வாழ்க வறுமுகம் வாழ்க ." என வாழ்த்துதல் பொருளிலும்; நடக்க , வருக , உண்க என உயர்ந்தோன் இழிந்தோனை இன்னது செய்க என விதித்தல் பொருளிலும் ; "போற்றி யருளுக நின்னாதியாம் பாதமலர்" என வேண்டிக்கோடல் பொருளிலும் ; "பரந்து கெடுக வுலகியற்றியான்" என வைதல் பொருளிலும் வரும் எனக் காண்க. விதித்தல் பொருள் தன்மையில் வராது.

19