|
| பொதுப்பாயிரம் மாணாக்கனது வரலாறு மாணாக்கர் ஆகாதவர் இலக்கணம் | | 39 | களிமடி மானி காமி கள்வன் பிணிய னேழை பிணக்கன் சினத்தன் துயில்வோன் மந்தன் தொன்னூற் கஞ்சித் தடுமா றுளத்தன் தறுகணன் பாவி படிறனின் னோர்க்குப் பகரார் நூலே. | | ஆறுமுகநாவலர் காண்டிகையுரை | | களி - கள்ளுண்டு களிப்பவனும் , மடி-சோம்பேறியும் , மானி - அகங்காரம் உடையவனும் , காமி - காமமுடையவனும் , கள்வன்-திருடனும் , பிணியன் - நோயாளியும் , ஏழை - அறிவில்லாதவனும் , பிணக்கன் - மாறுபாடு உடையவனும் , சினத்தன் - கோபம் உடையவனும் , துயில்வோன்-மிகத் தூங்குவோனும் , மந்தன் - புத்தி நுட்பம் இல்லாதவனும் , தொன்னூற்கு அஞ்சித் தடுமாறு உளத்தன்- பழைய நூல்களைக் கண்டு அஞ்சித் தடுமாறும் உள்ளத்தை உடையவனும் , தறுகணன் - அஞ்சத்தக்கவைகளை அஞ்சாதவனும் , பாவி - பாவஞ் செய்வோனும் , படிறன் - பொய் பேசுவோனும் , இன்னோர்க்கு - ஆகிய இப்படிபட்ட குற்றத்தை உடையவருக்கு , நூல் பகரார் - நூலைச் சொல்லார் ஆசிரியர் .
|
|