சிறப்புப்பாயிரம்
 
பூமலி நாவன் மா மலைச் சென்னி
ஈண்டிய இமையோர் வேண்டலின் போந்து,
குடங்கையின் விந்த நெடுங்கிரி மிகை தீர்த்து,
அலைகடல் அடக்கி, மலயத்து இருந்த
இரும் தவன் தன்பால் , இயல் தமிழ் உணர்ந்த
புலவர் பன்னிருவருள் தலைவன் ஆகிய,
தொல்காப்பியன் அருள் ஒல்காப் பெரும்பொருள்
அகப்பொருள் இலக்கணம் அகப்படத் தழீஇ,
இகப்ப அருஞ்சான்றோர் இலக்கியம் நோக்கித்,
தொகுத்து முறைநிறீஇச் சூத்திரம் வகுத்தாங்கு,
அகப்பொருள் விளக்கம் என்று அதற்கு ஒரு நாமம்
புலப்படுத்து இருள் அறப் பொருள் விரித்து எழுதினன் ;
மாந்தரும் , தேவரும் , வாழ்த்த முக் குடைக்கீழ்.
ஏந்து எழில் அரிமான் ஏந்து பொன் அணைமிசை ,
மதி மூன்று கவிப்ப உதய மால் வரைக்
கதிர் ஒன்று இருந்து எனக் காண் தக விருந்து ,
தத்துவம் பகர்ந்தோன் சரணம் பொருந்திய
உத்தமன் , புளிங்குடி உய்யவந்தான் எனும்
முத்தமிழ் ஆசான் மைந்தன் , இத்தலத்து
இருபெருங் கலைக்கும் ஒருபெருங் குரிசில் ,
பாற்கடல் பல்புகழ். பரப்பிய,
நாற்கவிராச நம்பி என்பவனே.
உரை