நோக்கிச்சென்ற என்நெஞ்சு, அவன் கருணைகாட்டவில்லை என்ற
காரணத்தால் அவன்பக்கல் இருப்பதை வெறுத்து என்னிடம் மீண்டு வாராது
ஒழிக" என்று தலைவன் பொருட்பிரிவிடைத் தலைவி இரங்கி உரைத்த
பாடல் இது. இதன்கண் கானல்மாலை-நீல்நிறப்பெருங்கடல்-புள்குடம்பைசேர
வண்டு ஆர்க்கும் காலை-என முதற்பொருள்களும், கழிப்பூ - புன்னை -
தாழை - பெண்ணை - முதலிய கருப் பொருள்களும், நெஞ்சம் இனைய
அருளார் ஆயினும் அவர்கேண்மை அறாஅலியர், நெஞ்சம் வாரற்க என
இரங்கும் உரிப்பொருளும் வந்தவாறு காண்க.
"நறை பரந்த" என்ற பாடல்:
"சந்தன மரங்களை வெட்டிச் சீர்திருத்தி விதைத்த தினைக்கொல்லையில்
அம்புபட்ட மான்கள் வந்தனவா? என்ற கருத்துடைய இப்பாடலில், சாந்தம்-
ஏனல்-என்ற கருப்பொருள்களும், தலைவன், தலைவி தோழி இருவரும்
நின்ற இடத்து மதிஉடன்படுத்தலாகிய புணர்தல்நிமித்தமாம் உரிப்பொருளும்
வர முதற்பொருள் வாராமை காண்க.
"முதுக்குறைந்தனளே" என்ற பாடல்:
மலைநாட்டுத் தலைவன்மகள் முலைகள் முகிழ்க்காத பிள்ளைப்
பிராயத்திலேயே பேரறிவு படைத்தாள்-என்ற கருத்தமைந்த இப்பாடலில்,
தலைவி காமப் பொருட்கண் சிறிது அறிவு படைத்தாள் என்ற உரிப்பொருள்
ஒன்றுமே கொண்டு ஏனைய முதலும் கருவும் இன்றிக் குறிஞ்சித்திணை
வந்தவாறு காண்க.
"நாளும் நாளும்" என்றபாடல்:
"நாடோறும் முயற்சி இன்றி வீட்டிலேயே அகஇன்பம் நுகர்பவர் புகழ்
எய்தார் என்று நம் தலைவர் பொருள் தேடப் பிரிந்துள்ளார் ஆதலின், நீ
கண்ணீரைத் துடைத்துக்கொள்க" என்று தோழி தலைவியை வற்புறுத்தி