பக்கம் எண் :

 164                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     நெய்தற்குமக்கள்பெயர்நுளையர், நுளைச்சியர் என்பன; அவருள்
 தலைமக்கள் பெயர் சேர்ப்பன், துறைவன் கொண்கன் என்பன. பிறவும்
 அன்ன.

     இனி, நச்சினார்க்கினியர் தொல்காப்பியப் பொருட்படல 18, 20 ஆம்
 நூற்பாக்களில் உரைப்பன பின்வருமாறு:

     முல்லைக்கு உணா வரகும் சாமையும் முதிரையும். மா-உழையும்
 புல்வாயும் முயலும். மரம்-கொன்றையும் குருந்தும். புள்-கானங்கோழியும்
 சிவலும். பறை-ஏறு கோட்பறை. செய்தி-நிரைமேய்த்தலும் வரகு முதலிய
 களைகட்டலும் கடாவிடுதலும். யாழ்-முல்லையாழ். "பிறவும்" என்றதனால்
 பூ-முல்லையும் பிடவும் தளவும் தோன்றியும்; நீர்-கான்யாறு; ஊர்-பாடியும்
 சேரியும் பள்ளியும்.

     குறிஞ்சிக்கு உணா ஐவன நெல்லும் தினையும் மூங்கில் அரிசியும்.
 மா-புலியும் யானையும் பன்றியும். மரம்-அகிலும் ஆரமும் தேக்கும் திமிசும்
 வேங்கையும். புள்-கிளியும் மயிலும். பறை - முருகியமும் தொண்டகப்
 பறையும். செய்தி-தேன் அழித்தலும் கிழங்கு அகழ்தலும் தினை முதலிய
 விதைத்தலும் கிளிகடிதலும். யாழ்-குறிஞ்சி யாழ். "பிறவும்" என்றதனால்,
 பூ-காந்தளும் வேங்கையும் சுனைக்குவளையும்; நீர்-அருவியும் சுனையும்;
 ஊர் சிறு குடியும் குறிஞ்சியும்.

     பாலைக்கு உணா ஆறு அலைத்தனவும் சூறை கொண்டனவும்.
 மா-வலி அழிந்த யானையும் புலியும் செந்நாயும். மரம்-வற்றின இருப்பையும்
 ஓமையும் உழிஞையும் ஞெமையும். புள்-கழுகும் பருந்தும் புறாவும்.
 பறை-சூறைகோட்பறையும் நிரைகோட்பறையும். செய்தி-ஆறலைத்தலும்
 சூறைகோடலும். யாழ்-பாலையாழ். "பிறவும்" என்றதனால், பூ-மராவும்
 குராவும் பாதிரியும்; நீர்-அறுநீர்க் கூவலும் சுனையும்; ஊர் பறந்தலை.