மருதத்திற்கு உணா செந்நெல்லும் வெண்ணெல்லும். மா-எருமையும் நீர்
நாயும். மரம்-வஞ்சியும் காஞ்சியும் மருதமும். புள்-தாராவும் நீர்க்கோழியும்.
பறை-மணமுழவும் நெல்லரிகிணையும். செய்தி-நடுதலும் களைகட்டலும்
அரிதலும் கடாவிடுதலும். யாழ்-மருதயாழ். "பிறவும்" என்றதனால்,
பூ-தாமரையும் கழுநீரும்; நீர்-யாற்றுநீரும் மனைக்கிணறும் பொய்கையும்;
ஊர்-ஊர்கள் என்பனவேயாம்.
நெய்தற்கு உணா மீன்விலையும் உப்புவிலையும். மா-உமண்பகடு
போல்வன; முதலையும் சுறாவும் மீன் ஆதலின், மா என்றல் மரபு அன்று.
மரம்-புன்னையும் ஞாழலும் கண்டலும். புள்-அன்னமும் அன்றிலும்
முதலியன. பறை-மீன்கோட்பறை. செய்தி-மீன்படுத்தலும் உப்பு விளைத்தலும்
அவை விற்றலும். யாழ்-நெய்தல்யாழ் "பிறவும்" என்றதனால், பூ-கைதையும்
நெய்தலும்; நீர்-மணற்கிணறும் உவர்க்குழியும்; ஊர்-பட்டினமும் பாக்கமும்.
ஐவகை நிலத்தும் மருவிய குலப்பெயர் ஆவன:
குறிஞ்சிக்குக் கானவர் வேட்டுவர் குறவர் இறவுளர் குன்றுவர்,
வேட்டுவித்தியர் குறத்தியர் குன்றுவித்தியர். ஏனைப் பெயர் வருமேனும்
உணர்க.
பாலைக்கு எயினர் எயிற்றியர் மறவர் மறத்தியர். பிறவருமேனும்
கொள்க.
முல்லைக்குக் கோவலர் இடையர் ஆயர் பொதுவர் இடைத்தியர்
கோவித்தியர் ஆய்த்தியர் பொதுவியர். பிறவருமேனும் கொள்க.
மருதத்திற்குக் களமர் உழவர் கடையர் உழத்தியர் கடைச்சியர். ஏனைப்
பெண் பெயர் வருமேனும் உணர்க.
நெய்தற்கு நுளையர் திமிலர் பரதவர் நுளைத்தியர் பரத்தியர், ஏனைப்
பெண்பெயர் வருமேனும் உணர்க.