பெருமையாவது அறிவும் ஆற்றலும் புகழும் கொடையும் ஆராய்தலும்
பண்பும் நண்பும் பழிபாவம் அஞ்சுதலும் முதலியவற்றின் மேம்பாடு.
உரனாவது கடைப்பிடியும் நிறையும் கலங்காது துணிதலும் முதலியவற்றின்
திண்மை. அச்சமாவது தன் அன்பு காரணத்தால் தோன்றிய உட்கு.
நாணாவது காமக்குறிப்பு நிகழ்ந்தவழிப் படுவதோர் உள்ள ஒடுக்கம்.
மடமாவது செவிலியர் கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை.
இனி, ஒன்று என முடித்தலால் கண்டறியாதன கண்டுழி மனம்
கொள்ளாத பயிர்ப்பும், செயத்தகுவது அறியாத பேதைமையும், நிறுப்பதற்கு
நெஞ்சு உண்டாம் நிறையும் கொள்க. மடம் குடிப்பிறந்தோரது செய்கை
ஆதலின், அச்சமும் நாணும் போல மெய்யுறு புணர்ச்சியை விலக்குவதாம்.
இவை இருவர்க்கும் மன்னிய குணங்கள் ஆதலின் மெய்யுறு புணர்ச்சிக்கு
உரியர் அல்லர் ஆயினும், இவ்விலக்கணத்தில் திரியாது நின்றே
மெய்யுறுபுணர்ச்சிக்கு உரியர் ஆவர் என்பார், "முன்னர் உள்ளப் புணர்ச்சி
உரியது ஆகும்" என்றார். அங்ஙனம் ஆதல் மேல் கூறுமாற்றானும
உணர்க. 32
இந் நூற்பா விளக்கம் தொல்காப்பியப் பொருட்படலத்து 98, 99 ஆம்
நூற்பாக்களின் உரையில் நச்சினார்க்கினியர் வரைந்தனவே. உரன்-அறிவின்
வலிமை. கடைப்பிடி-உறுதியாகப் பிடித்தல். "பெருமை உரன் என்பவற்றானே,
உள்ளப் புணர்ச்சியே நிகழ்ந்து வரைந்து கொள்ளும் உலக வழக்கும்,
மெய்யுறு புணர்ச்சி நிகழ்ந்துழியும் களவு நீட்டியாது வரைந்துகோடலும்,
உள்ளம் சென்றுழிஎல்லாம் நெகிழ்ந்து ஓடாது ஆராய்ந்து ஒன்று செய்தலும்,
மெலிந்த உள்ளத்தானாயும் தோன்றாமல் மறைத்தலும், தீவினை