பக்கம் எண் :

 190                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     "ஒண்டொடி அரிவை"-

     "தலைவி என் உள்ளத்தைக் கைப்பற்றிக்கொண்டதனால், தொண்டி
 என்ற ஊரின் கடல்துறையில் உள்ள அலைகளைப்போல, யான் இரவிலும்
 உறக்கத்தைத் துறந்துவிட்டேன்" என்று தலைவன் தனக்கு ஏற்பட்ட
 வேறுபாட்டைப் பாங்கனிடம் சொற்றவாறு.

     "காமம் வீடு"-

     "நெஞ்சே! ஒன்று காமத்தை விட்டுவிடு; இன்றேல் கருமத்தால் நாணும்
 நாணத்தை விட்டுவிடு. இருவேறுபட்ட பண்புகளாகிய இரண்டையும் யான்
 தாங்கும் ஆற்றல் இலேன்" என்று தலைவன் நெஞ்சிடம் நாணத்தைக் கடந்து
 சொற்றவாறு.

     "ஓங்கு எழில் கொம்பர்"-

    கொடியை இடை எனக் கருதித் தழுவும்; காந்தளைக் கை எனக் கொண்டு
 விரும்பும்; கருவிளையைக் கண்ணெனக் கருதிப் பற்றும்; மாந்தளிரைத்
 தலைவி மேனியாகக் கொண்டு தடவும்; பொழில் நோக்கிச் செல்லும் மயிலின்
 சாயல் கண்டு தலைவியாகவே கொண்டு பின்தொடரும்; மூங்கிலைத் தோள்
 என்று  கருதித் தொடும்; கருமணலைத் தலைமயிராகக் கருதி நெருங்கும்
 என்ற இச்செய்தியில் நோக்குவ எல்லாம் அவையே போறல் பற்றித்
 தலைமகனுக்கு அவத்தை நிகழ்ந்தவாறு.

     "கோடல் எதிர்முகை"-

     "காந்தள்மொட்டு, முல்லைமலர், குவளைப்பூ இவற்றை இடையிடையே
 கலந்து அழகாகத்தொடுத்த மாலையைப் போலத் தலைவி மேனி தளிரினும்
 மேம்பட்டதாய்த் தழுவுதற்கு இனிதாய் உள்ளது" என்பது மெய்யுறு
 புணர்ச்சியை நுகர்ந்து அதனை வியந்த தலைமகன் சொற்றவாறு.