யாருக்கு உரை வரைந்த பேராசிரியர் தம் உரையில் அகப்பொருள்
இலக்கண நூற்பாக்களையும் தொடர்பாக அமைத்துள்ளார்.
இடைக்காலச் சோழர்கள் ஆட்சியில் தோன்றிய நம்பி அகப்பொருள் என்ற நூல் அகப்பொருள் இலக்கணத்தைப் பொருள் தொடர்பு சிறக்க அமைக்கவே, அதுவே பிற்காலக்கோவைகள் பலவும் தோன்றுதற்கு இலக்கணமாகி, அகப்பொருள் இலக்கணமாக நாட்டில் பயில வழங்குவதாயிற்று. |
பதினாறாம் நூற்றாண்டில் தோன்றிய மாறன்அகப்பொருள் கோவைகளில் துறைகளைச் சிறிது விரிவாக்கியது. பிற்பட்ட முத்துவீரியமும் பெரும்பாலும் திருக்கோவையாரையும் நம்பி அகப்பொருளையும் அடியொற்றியே நிகழ்வதாயிற்று. |
இவ்வாசிரியர் தாம் மேற்கொண்ட கொள்கைக்கு ஏற்ப ஒவ்வோரதி காரத்தையும் ஐந்து இயல்களாக அமைக்கும் முறையில், பொருளதிகாரத்தை அகத்திணையியல், புறத்திணையியல், அணியியல், செய்யுளியல், பாட்டியல் என்ற ஐந்து இயல்களாக அமைத்துள்ளார். |
அகத்திணையியற்கண் பெரும்பாலும் நம்பியகப்பொருள் நூற்பாக்களே இடம் பெற்றுள எனினும், தேவைப்பட்ட இடங்களிலெல்லாம் தொல்காப்பியக் கருத்துக்களும் நச்சினார்க்கினியர் பேராசிரியர் உரையாசிரியர் ஆகியோர் தரும் உரை விளக்கங்களும், சில இடங்களில் இறையனார் களவியல் உரைச் செய்திகளும் இடம் பெற்றதனால், இவ்வகத்திணையியல் நம்பியகப் பொருளினும் பல்லாற்றானும் சிறந்து விளங்குகின்றது. பழையனவற்றோடு முரணாதனவாகிய புதியன புணர்த்து இவ்வாசிரியர் நூல்யாத்துள்ள சிறப்பு இவ்வகத்திணையியற் கண்ணும் மிளிர்கிறது. ஏனைய இயல்கள் பற்றிய முன்னுரைகளை அவ்வவற்றின் தொடக்கத்தில் காணலாம். |