பக்கம் எண் :

 260                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     அவரவர் உள்ளத்துப் புணர்ச்சி விழையும் குறிப்பினை உணர்த்தவே,
 மனம் நெகிழ்ந்து  தலைவன் தலைவியைக் கூடுதலே அன்பாகும் என்பது.

     ஏனைய உலகத்துக் களவுகள் ஒறுத்தலைப் பயப்பவும், இது,
 மேன்மக்களானும் புகழப்பட்டு வானோர் உலகமும் வானோர்க்கு உயர்ந்த
 உலகமும் வழங்கும் என்பது கருதிக் "களவு எனப்படுவது" என முதல்
 வேற்றுமைச் சொல்லுருபு பெய்து கூறப்பட்டது.

     "களவு எனப்படுவது" என்பதன் விளக்கம் இறையனார் அகப்பொருள்
 முதல்நூற்பா  உரைகொண்டு வரையப்பட்டது.

     எண்வகை மணங்களின் விளக்கம் தொல்காப்பியப் பொருட்படல 9ஆம்
 நூற்பாவில் நச்சினார்க்கினியர் வரைந்தனவே.

     அசுரம் இராக்கதம் பைசாசம் மூன்றும் கைக்கிளை ஆமாறு-
 "வில்லேற்றியாயினும் கொல்லேறு தழீ இயாயினும் கொளவன்" என்னும்
 உள்ளத்தன் ஆவான் தலைவனே ஆதலின், அதனை முற்படப்பிறந்த அன்பு
 முறைபற்றி ஒரு தலைக்காமம் ஆகிய கைக்கிளை என்றார். இராக்கதம்
 வலிதின் மணம் செய்தலாகலின், அதுவும் அப்பாற்படும்; பேயும்
 அப்பாற்படும்.

     பிரமம் முதலிய நான்கும் ஒருதலைக்காமம் பற்றி நிகழாமையானும்,
 ஒருவனோடு ஒருத்தியை  எதிர்நிறீஇ அவர் உடன்பாட்டோடு புணர்க்கும்
 கந்தருவம் அன்மையானும் அவற்றின் வேறாகிய  பெருந்திணையாம்.

     கந்தருவ வழக்கமாவது நேர்ந்தவழிக் கூடித் தீர்ந்தவழி மறப்பதாம்;
 இக்களவோ பிரியாது உடன்வாழ்தல் இன்றேல் தரியாது உயிர்நீத்தல்
 என்னும் இயல்பிற்றாகலின், தாமே தனியிடத்து உளம்ஒன்றிக் கூடுதலாகிய
 ஒருபுடை ஒப்புமையேபற்றிக் கந்தருவ வழக்கத்தை ஒப்பதாம் என்பது.