இ-ள் இரந்து பின்நிற்றற்கு எண்ணல் முதலாகப் புகழ்தல் ஈறாகச் சொல்லப்பட்ட பதினைந்து கிளவியும், பிறவும் மேல் சொல்லப்பட்ட தலைமகளால் புணரும் புணர்ச்சியின் விரியாம் என்றவாறு.
"உணர்த்திய தலைவியிற் புணர்ச்சி" என்றதற்குப் "போற்றிய தெய்வப் புணர்ச்சி" என்றதற்கு உரைத்தாங்கு உரைக்க.
"பிற" என்ற மிகையானே, முன்னிலை ஆக்கலின் பின்னர் மருங்கு அணைதலும், புகழ்தற்குப் பின் ஏற்புற அணித்தலும் வரவும் பெறும்.
[1 தன்குறைகளைச் சொல்லித் தலைவியின் பின்னே இரந்து நிற்றற்குத் தலைவன் எண்ணுதல்.
2 இரந்து தலைவியின்பின்னே நின்ற தலைவன் வழிபாடு செய்தற்கு முயன்று நிலைநிற்றல்.
3 தலைவியைத் தனக்கு முற்படுத்தித் தலைவன் கூறுதல்.
4 தலைவியின் மெய்யைத் தீண்டித் தலைவன் நெருங்குதல்.
5 தலைவியின் அழகைத் தலைவன் புனைந்து கூறல்.
6 உரிய இடத்தைப்பெற்றுத் தழுவுதலைத் தலைவன் விரும்பிக் கூறுதல்.
7 தலைவன் செய்யும் வழிபாட்டை நாணினால் மறுத்த தலைவி, தான் மறைந்து கொள்ளுதற்பொருட்டு ஒரு கொடியைச் சார்தல்.
8. அதன்பால் சென்ற தலைவி நாணினால் தன் விழிகளைப் புதைத்துக்கொள்ள, அதனால் தனக்கு உண்டாகும் துன்பத்தைத் தலைவன் கூறுதல்.
|
|
|
|