வினாய இடத்து, "இவர் யார்?" எனவும், "இவர் மனத்து எண்ணம் யாது?" எனவும் தோழி ஆராய்தலும், ஆய்ந்து அவன் அகத்து எண்ணத்தினைத் தெளிதலும்.
தலைமகன் கிழவியும் தோழியும் ஒருங்கு தலைப்பெய்த செவ்விக்கண் ஒருதலையாகச் சென்று கண்ணியும் தழையும் ஏந்தி நின்று முன்போல ஊர் பெயர் முதலியன வினாயஇடத்துத் தோழி அதற்கு எதிர்மொழி கொடுத்தலும், இறைவனை நகுதலும், மதியினின் அவர்அவர் மனக்கருத்து உணர்வும் என்று இவ்வாறு கூறிய எட்டுக்கிளவியும் பாங்கி மதிஉடன் பாட்டு விரியாம் என்றவாறு.
இதனுள், நாற்றமாவது-ஓதியும் நுதலும் முதலியன பேதைப் பருவத்துக்குத் தக நாறாது தலைவன் கூட்டத்தான் மான்மதச் சாந்து முதலியனவும் பல பூக்களும் விரவிநாறுதல்.
தோற்றமாவது - நீண்டும் பிறழ்ந்தும் பிள்ளைப் பருவத்து வெள்ளைநோக்கு இன்றி உள்ளொன்று கொள்ளநோக்கும் கண்ணும், தம்நிலை திரிந்து துணைத்து மெல்கிப் பணைத்துக் காட்டும் தோளும் முலையும் என்று இன்னோரன்னவற்றின் பொலிவு.
ஒழுக்கமாவது - பண்ணை ஆயத்தோடு முற்றிலான் மணல் கொழித்துச் சோறு அமைத்தல் முதலாயின முனிந்த குறிப்பினளாய்ப் பெண்தன்மைக்கு ஏற்ப ஒழுகுதலும், தெய்வம் தொழாமை முதலியனவும் ஆம்.
உண்டியாவது - பண்டையில் குறைந்த உண்டி.
செய்வினை மறைத்தலாவது-முன்போலாது இக்காலத்து நினைவும் செயலும் தலைவனொடுபட்டன ஆகலான், அவை பிறர்க்குப் புலனாகாமை மறைத்தல். அஃது ஆயத்தொடு கூடாது இடந்தலைப்பாட்டிற்கு ஏதுவாக நீங்கி நிற்றலாம்.
|
|
|
|