பக்கம் எண் :

அகத்திணையியல் அமைப்பு


 

     அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்பொருள்  நான்கனுள்,
 வீடுபேறு சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து.  ஆதலின்,
 நூல்களான் நுவலப்படுவன அறம் பொருள் இன்பம்  என்ற மூன்றே. அவை
 தொகுத்துக் கூறும் தமிழ்மரபிலே அகம் புறம் என்று இருபகுதியாக
 வழங்கப்பட்டு, அணி நலன்களோடு செய்யுளகத்துக் கூறப்படும். அவற்றுள்,
 அகமாவது அறம் பொருள் இன்பம் என்ற  மூன்றனுள் இன்பம் என்னும்
 வகையதாகி, உள்ளத்தாலேயே நுகர்ந்து இன்புறும் காம இன்பமாகும். அது
 கைக்கிளை ஐந்திணை பெருந்திணை என எழுவகைப்படும். கைக்கிளையாவது
 ஒருதலைக்காமம்; பெருந்திணையாவது பொருந்தாக்காமம்; ஐந்திணையாவது
 அன்புடைக் காமம் ஆகும். இவ்வெழுவகைத்திணையும் பண்டைய சான்றோர்
 கூறிய மரபுவழாமல், யாதானும் ஒரோவழி ஒருசாரார்மாட்டு உலகியலான்
 நிகழும் ஒழுக்கத்தினை எல்லாருக்கும். பொதுவாக்கி இடனும் காலமும்
 நியமித்துப் புனைந்துரை வகையானும் உலகியல் வகையானும் கூறப்படும்.
 ஐந்திணைகள் குறிஞ்சி பாலை முல்லை மருதம் நெய்தல் என்பனவாம்.
 ஒவ்வொரு திணைக்கும் முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் என்பன
 கொள்ளப்படும். முதற்பொருள், நிலன் எனவும் பொழுது எனவும்
 இருவகைப்படும். மலையும் மலைசார்ந்த இடமும், பாலையும் பாலைசார்ந்த
 இடமும், காடும் காடுசார்ந்த  இடமும், வயலும் வயல்சார்ந்த இடமும்,
 கடலும் கடல்சார்ந்த இடமும், முறையே இவ்வைந்திணைக்கும் நிலன்களாகும்.
 பொழுது, பெரும்பொழுது எனவும் சிறுபொழுது எனவும் இருவகைப்படும்.
 கார் கூதிர் முன்பனி பின்பனி இளவேனில் முதுவேனில் என்ற ஆறு
 பெரும்பொழுதுகளும், ஆவணித்திங்கள் தொடங்கி ஆடித்திங்கள் இறுதியாக,
 இரண்டு இரண்டு திங்களை வரையறையாக உடையன. மாலை யாமம்
 வைகுறு காலை நண்பகல் எற்பாடு என்ற சிறுபொழுது ஆறும், கதிரவன்
 மறைதல் தொடங்கி மறுநாள் கதிரவன் மறையுங்காறும் ஒவ்வொன்றும்
 பப்பத்து நாழிகையான அளவை உடையவாம். குறிஞ்சிக்குப்  பெரும்
 பொழுதுகள் கூதிரும்முன்பனியும்,  சிறுபொழுது யாமமும் ஆகும்.
 பாலைக்குப் பெரும்பொழுதுகள் இளவேனிலும் முதுவேனிலும், சிறுபொழுது
 நண்பகலும் ஆகும். முல்லைக்குப் பெரும்பொழுது காரும், சிறுபொழுது
 மாலையும் ஆகும். மருதத்திற்கு ஆண்டு முழுதும் பெரும்பொழுதும்,
 வைகுறுவும் விடியலும் சிறுபொழுதுகளும் ஆகும். நெய்தலுக்கு ஆண்டு
 முழுதும் பெரும்பொழுதும், எற்பாடு சிறுபொழுதும் ஆகும்.