இறைவிக்கு அவன்குறை உணர்த்தலும்37 இறைவி
அறியாள் போன்று குறியாள் கூறலும்38
பாங்கி இறையோன் கண்டமை பகர்தலும்39
பாங்கியைத் தலைவி மறைத்தலும்40 பாங்கி
என்னை மறைப்பது என்எனத் தழாஅலும்41
கையுறை புகழ்வும்42 என்று இவ்விரு மூன்றும்;
தோழி கிழவோன் துயர்நிலை கிளத்தலும்43
மறுத்தற்கு அருமை மாட்டலும்44 தலைவன்
குறிப்பு வேறாக நெறிப்படக் கூறலும்45
தலைவியை முனிதலும்46 தலைவி பாங்கி
தன்னை முனிதலும்47 தன்கைக் கையுறை
ஏற்றலும்48 எனமுறை சாற்றிய ஆறும்;
இறைவி கையுறை ஏற்றமை பாங்கி
இறைவற்கு உணர்த்தலும்49 குறியிடம் கூறலும்50
குறியிடத்து இறைவியைக் கொண்டு சேறலும்51
குறியிடத்து உய்த்து நீங்கலும்52 இறையோன்
இடத்துஎதிர்ப் படுதலும்53 இயைதலும்54 புகழ்தலும்55
விடுத்தலும்56 பாங்கி மெல்லியல் சார்ந்து
கையுறை காட்டலும்57 மைஉறை கண்ணியைப்
பாங்கில் கூட்டலும்58 நீங்கித் தலைவற்கு
ஓம்படை சாற்றலும்59 உலகியல் மேம்பட
விருந்து விலக்கலும்60 பெருந்தகை விருந்துஇறை
விரும்பலும்61 எனமுறை தெரிந்தபன் மூன்றோடு
அற்றம்இல் சிறப்பின்இவ் வறுபத் தொன்றும்
குற்றம்இல் பாங்கியின் கூட்டத்து விரியே.