தலைவியின் இளமைத் தன்மை பாங்கி தலைவற்கு உணர்த்தல் முதலாகக் கிழவோன்
ஆற்றல் ஈறாகச் சொல்லப்பட்ட ஒன்பதும், இறைவன் தனக்குக் குறை நேர் பாங்கி இறைவிக்கு
அவன்குறை உணர்த்தல் முதலாகப் பாங்கி கையுறை புகழ்தல் ஈறாகச் சொல்லப்பட்ட ஆறும்,
தோழி கிழவோன் துயர்நிலை கிளத்தல் முதலாகக் கையுறை ஏற்றல் ஈறாகச் சொல்லப்பட்ட ஆறும்,
இறைவி கையுறை ஏற்றமை பாங்கி இறைவற்கு உணர்த்தல் முதலாகத் தலைவன் விருந்துஇறை விரும்பல்
ஈறாக ஆராய்ந்த பதின்மூன்றோடு கூட மிகுந்த சிறப்பினை உடைய இவ்வறுபத்தொரு கிளவியும் தீமை
இல்லாத பாங்கியிற்கூட்டத்து விரியாம். எ-று.
[1 தன் உள்ளத்துக்கொண்ட காதலைத் தலைவன் பாங்கிக்குச் சொல்லுதல்.
2 தலைவன் குலத்தின் மேம்பாட்டையும் தங்கள் குலத்தின் தாழ்வையும் பாங்கி தலைவனுக்குச் சொல்லுதல்.
3 தலைவன் தலைவியை மேம்படுத்திச் சொல்லுதல்.
4 பாங்கி, தலைவன் விரும்பிய நங்கையை இன்னாள் என்று அறியாள்போன்று அவனை வினவுதல்.
5 தலைவன் தலைவியின் சிறப்பிலக்கணத்தைத் தோழியிடம் கூறுதல்.
6 பாங்கி தலைவனிடம் அவன் குறித்த நங்கை பெறுதற்கு அரியவள் என்பதைக் கூறுதல்.
7 தனக்குத் தலைவி இன்றியமையாதவள் என்பதைத் தலைவன் தோழிக்குச் சொல்லுதல்.
8 பாங்கி தலைவனிடம்"நின்காரியத்தை நீயே சென்று தலைவியிடம் சொல்லு" என்று குறிப்பிடுதல்.
9 தலைவன் அச்சொல் பொறாது பாங்கியைப் பழித்துக் கூறுதல்.
|
|
|
|