பக்கம் எண் :

 42                            இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     கிழத்தியரும், பின்முறை ஆக்கிய பெரும்பெயர் வதுவைத் தலைவியும்
 உரிமையுடையர். காதற்பரத்தையர் களவுப் புணர்ச்சிக்கே உரியர். ஏனையார்
 இருவரும் திருமணம் செய்துகோடற்கு உரிமை உடையர். பரத்தையிற்பிரிவு,
 ஓதற்குப்பிரிவு, காவற்குப்பிரிவு, தூதிற்குப்பிரிவு, மன்னனுக்கு உதவிசெய்யப்
 பகைவயின் பிரிவு, பொருள்வயின் பிரிவு என்ற அறுவகைப்பிரிவுகளும்
 கற்புக்காலத்து நிகழும். தலைவன் பரத்தையிற் பிரிவில் அடுத்தவீட்டிற்கும்,
 அடுத்த சேரிக்கும், ஊருக்கு வெளிப்புறத்துக்கும் பிரிந்துபோதற்கு உரியன்;
 தன் காமக்கிழத்தியர் பொருட்டாக அடுத்த மனைக்குப் பிரிந்து செல்வான்;
 தான் பின்மணந்த பெதும்பைப்பருவத்தாள் பொருட்டாகவும், பரத்தை
 பொருட்டாகவும், விழாக்கள்பொருட்டாகவும் அவன் அயற்சேரிக்குச்
 செல்வான்; புதியளாகப் பெற்ற பரத்தையைத் தன்தேரின்மீது ஏற்றிக்கொண்டு
 இளமரச்சோலையில் விளையாடுவதற்கும் யாறு குளங்களில் நீர்விளையாட்டு
 நிகழ்த்துவதற்கும் அவன் ஊருக்கு வெளியே புறப்பட்டுப் போவான்.
 இச்செய்திகளால் தலைவிக்கு ஊடல் நிகழும். அவ்வூடலைப் போக்குவதற்குப்
 பாணன், பாடினி, கூத்தர், இளையர், கண்டோர், பார்ப்பனப்பாங்கன்,
 வேளாளப்பாங்கன், பாகன், தோழி, செவிலி, அறிவர், காமக்கிழத்தியர், காதல்
 புதல்வன், விருந்தினர் என்பார் வாயிலாக அமைவர். இவர்கள் இல்லாத
 இடத்து ஆற்றாமையும் வாயிலாக அமையும்.

     வேதம் ஓதுதல் அரசர் அந்தணர் வணிகர் என்ற மூன்று
 வருணத்தார்க்கும் உரித்து. ஏனைய நூல்களைப் பயிலும் கல்வி நான்கு
 வருணத்தாருக்கும் உரித்து. படைக்கலம் பயிலுதல், யானை ஏற்றம், குதிரை
 ஏற்றம், தேர் செலுத்துதல் முதலிய தொழிற்கல்விகள் அந்தணர் அரசர்
 வணிகர் என்ற மூவருக்கும் உரிய.

     காவல், அறப்புறம்காவல் நாடுகாவல் என இருவகைப்படும். அவற்றுள்,
 அறப்புறம்காவல் நான்கு வருணத்தாருக்கும் உரித்து. நாடு காத்தல்தொழில்
 சிறப்பாக அரசருக்கே உரியது. அரசனால் சிறப்புப்பெயர் பெற்றால் நாடு
 காத்தல் தொழிலை வணிகரும் வேளாளரும் செய்தற்கும் உரியராவர்.