இளையோரின் தொழில்களாவன - தலைவியை வாயில் வேண்டலும்,
வாயில் நேர்வித்தலும், அவள் ஊடல்தீர்த்தலும், தலைவனைப் பிரியாது
இருந்து பாதுகாத்தலும், அவன் இட்ட குற்றேவல்களைச் செய்தலும், பிரிந்த
தலைவன் மீண்டு வருங்கால் அவனுக்கு முன்வந்து தலைவிக்கு அவன்
வருகையைக் கூறலும், அவனுடைய அருஞ்செயல்களைக் கூறலும், வினையின்
முடிவுபற்றிக் கூறலும், தலைவன் மீண்டுவரும் வழியின் இயல்பைக் கூறலும்,
வழியிடையே தாம் கண்டனவற்றைக் கூறலும் போல்வன.
கண்டோர் தொழில்களாவன - தலைவன் தலைவியரிடையே ஏற்படும்
புலவியை நீக்குதலும், தலைவன் பிரிந்தகாலை அவன் மீண்டு வருஞ்
செயலைத் தலைவிக்கு உணர்த்துதலும் போல்வன.
பார்ப்பனப்பாங்கன் தொழில்களாவன - தலைவனிடம் "இளமையும்
யாக்கையும் செல்வமும் ஏனைய உலகியல் பொருளும் நிலையா ஆதலின்,
இந்நிலையாதனகொண்டு நிலைத்த புகழுக்குரிய செயல்களைச் செய்து
கொள்ளுதல் வேண்டும்" என்பன போல்வனவற்றை எடுத்துஉரைத்தலும்,
தலைவன் பிரியக் கருதும்வழிப் பிரிவை விலக்கலும், பின் தேவைப்பட்ட
தாயின் அவன்பிரிவிற்குத் தலைவியை உடன்படச்செய்தலும் போல்வன.
வேளாளப்பாங்கன் தொழில்களாவன - தலைவனை நன்னெறிக்கண்
நிறுத்தலும், தீநெறிக்கண் செல்லாமை விலக்கலும் பார்ப்பனப்பாங்கனுக்குக்
கூறிய ஏனைய செயல்களும் போல்வன.
பாகன் தொழில்களாவன - தலைவன் பரத்தையிற் பிரிந்து மீண்டவழித்
தலைவியை வாயில்வேண்டலும், அவளைத் தலைவன் வருகைக்கு உடன்படச்
செய்தலும், அவள் கோபத்தைத் தணித்தலும், வினை முடிந்தபின்னர் மீண்டு
செல்ல வேண்டிய தன்ஊரின் சேய்மை கண்டு வருந்திய தலைவனைத்
தேரின் விரைவு கூறித் தெளிவித்தலும் போல்வன.