பெண்கொலை புரிந்த நன்னன் போல
வரையா நிரையத்துச் செலீஇயரோ அன்னை
நகைமுக விருந்தினன் வந்தெனப்
பகைமுக ஊரில் துஞ்சலோ இலளே.
[ஒருநாள் தலைவன் இரவில் விருந்தினனாக வந்தானாக, தாய் பகைப்புலத்து ஊரில் உள்ளார் அமைதியின்மையால் உறக்கத்தை நீத்து இருப்பதுபோல உறங்காமலே விழித்திருந்தாள். ஆதலின், குளிக்கச் சென்ற சிறுமி நீரில் அடித்து வரப்பட்ட மாங்காயைத்தின்ற தவற்றுக்காக, அவள் தந்தை எண்பத்தோர் யானைகளையும் அவளது நிறை அளவிற்றாகிய பொற்பாவையையும் ஒறுப்புத்தொகையாக வழங்கவும், அவற்றைக் கொள்ளாது அப்பெண்ணைக் கொலைபுரிந்த நன்னன் சென்ற நரகம்போல, என்றும் வெளியே உமிழ்தற்கு வாயை அங்காவாத நரகத்தில் அன்னை போய்ச்சேருவாளாக.]
தண்என் புனல்வையை சூழ்தஞ்சை வாணன் தரியலர்போல்
பெண்என் பிறவியும் பேறுஉடைத்து அன்றுஇப்பெரும்பதிநம்
கண்என் பவர்வரக் கங்குலில் ஞாளிக் கணம்குரைத்துத்
துண்என் கடுங்குரல் வாய்அன்னை துஞ்சினும் துஞ்சிலவே.
[வையை சூழும் தஞ்சைநகர்வாணனுடைய பகைவரைப் போலப் பெண்பிறப்பு எடுத்தாரும் பேறு உடையவர் அல்லர். இப்பேரூரில் நம் கண் போன்றவர் இரவுக்குறிக்கு வந்தாராக, கொடுஞ்சொல் கூறும் நம் அன்னை உறங்கினும், நாய்க்கூட்டங்கள் குரைத்துக்கொண்டு உறங்காது உள்ளனவே.]
|
|
|
|