தோழியின் தொழில்களாவன - தலைவன் பிரியக் கருதிய வழி அவள்
பிரிவினைத் தடுத்தலும், தலைவன் பிரிந்தவழித் தலைவியை அவன் பிரிவை
உட்கொள்ளச் செய்தலும், பிரிதல் துன்புறும் தலைவியைத் தேற்றலும்,
தலைவன் பிரிந்தவழித் தலைவி நிலைகண்டு இரங்கலும் போல்வன.
செவிலிக்கும் அறிவர்க்கும் உரிய தொழில்களாவன-இல்லறம் நிகழ்த்தும்
நெறிமுறைமை கூறலும், தலைவியைக் கூடுதற்குரிய நாள்நிமித்தம் கூறலும்,
அதனால் பின்னர் இல்வாழ்க்கை சிறக்கும் பெற்றியைக் கூறலும், வாயில்
வேண்டல் முதலியனவும் போல்வன.
காமக்கிழத்தியர் தொழில்களாவன - நற்குடிமகளிரைக் குறைகூறலும்,
தலைவியைப் பழித்தலும், தலைவியது ஊடல் கேட்டு அவளை இடித்து
உரைத்தலும், தலைவிக்கு அமைந்த நற்குண நற்செய்கைகளும் போல்வன.
பரத்தையர் தொழில்களாவன - தலைவனையும் தலைவியையும்
இகழ்தலும், தம்மைப்புகழ்தலும், கிடைத்த செல்வத்தை வீணே செலவிடாது
பாதுகாத்தலும் போல்வன. பரத்தையர் தமக்குள்ளேயே காதற்பரத்தையைப்
புகழ்ந்து, தம்மை இகழ்ந்து கூறிக்கொள்ளுதலும் உண்டு.
இளையராவார், இரவும் பகலும் தலைவனைப் பிரியாது அவனுக்கு
இடப்பட்ட கவசம்போல இருந்து அவனைப் பாதுகாத்தற்கு உரியார் ஆவர்.
இருவகைப்பாங்கரும் ஒப்பற்ற தலைவனுக்கு உயிர்த் துணைவராய்,
அவன்தாயும் தந்தையும் அவனைத் தம்மிடம் அடைக்கலமாக வழங்கத்
தாம் பெற்றுக்கொண்ட தன்மையர் ஆவர்.
தோழியாவாள், செவிலியின் புதல்வியாதலோடு, தலைவிக்கு அருகில்
இருந்து உரையாடும் நட்பினளாய், அவள் துயரைப் போக்குதலே
தனக்குக் கடப்பாடாக அமைந்த அன்பு பொருந்திய துணைவியாவாள்.