செவிலியாவாள், நற்றாயின் தோழியாய், தலைவியின் துயரங்களை நீக்கி
அவளுக்கு அறிவும் வாழும்முறையும் உணர்த்தி, அவளை நன்னெறிக்கண்
வளர்க்கும் தாயாவாள்.
அறிவராவார் தலைவன் தலைவி என்ற இருவருக்கும் உறுதிப்பொருள்
கூறும் ஒப்பற்ற தலைவராவார்.
காமக்கிழத்தியர் ஆவார், தனித்தனி ஒருவனுக்கே உரிமை பூண்டு
வாழ்ந்துவந்த பரத்தையரின் மகளிராய், தலைவனால் அன்போடு வரைந்து
கோடற்கு உரியராவார்.
காதல்பரத்தையர் ஆவார், பொருளையன்றித் தருவார் யாரையும்
விரும்பாத இயல்பினர்ஆகிய சேரிப்பரத்தையரின் மகளிராய்த் தலைவனால்
அன்போடு கூடப்பட்டவராவார். அவருள்ளும் சிலர், தலைவனால் மணந்து
கொள்ளப்படும் உரிமையைப் பெறுதலும் உண்டு.
தலைவனும் தலைவியும், திருமணத்தின்பின்னர், மனைமாட்சியின்
நன்கலனாகிய நன்மக்களோடு மகிழ்ந்து இல்லறத்தை நல்லறமாகச் செய்து,
தமக்கு மிக்கிருந்த காமவேட்கை நீங்கிய அளவில், இருவருமாகத் தம்ஊரை
விடுத்துக் காட்டின்கண் சென்று எல்லையில்லாச் சுற்றத்தாரோடும்
துறவறத்தைக் காத்து வீடுபேறு எய்துவர். ஆகவே, மக்கட்பிறப்பின் முடிந்த
பயன் வீடுபேறு எய்துதலாம்.
இவ்வாறு அகத்திணைக்குப்பொதுவான செய்திகளை முதல் 112 நூற்
பாக்களில் உரைத்த ஆசிரியர், கைகோள் இரண்டனுள் முதலாவதாகிய களவு
பற்றி அடுத்து விரிவாகக் குறிப்பிடத் தொடங்குகிறார்.
அன்பினான் ஆகிய ஐந்திணைக்கண் களவு என்று சிறப்பித்துச்
சொல்லப்படுவது, அந்தணருடைய அரிய வேத நூலினிடத்துக் கூறப்பட்ட
பிரமம் - பிரசாபத்தியம் - ஆரிடம் - தெய்வம் - காந்தருவம் - அசுரம் -
இராக்கதம் - பைசாசம்என்ற மகட்கோடலாறு எட்டனுள், கந்தருவ
வழக்கத்தோடு ஒத்த இயல்பிற்று என்று கூறுவர் புலவர்.