கைக்கிளையாவது தலைமகளைக்காண்டல், அவள் மானுட மகளோ
வேற்றுஉலகமகளோ என்று ஐயுறுதல், பின் காரணங்களால் அவள் மானுட
மகளே என்று துணிதல், அவள் தன்னைப்பற்றிக் கொண்டுள்ள உள்ளக்
குறிப்பினை அறிதல் என மாட்சிமைப்பட்ட நான்குவகையினை உடைத்து.
அவற்றுள் காட்சியாவது, பலபிறப்புக்களிலும் கணவன் மனைவியராய்
வருவார் இருவரையும் ஒன்றுபடுத்தலும் வேறாக்கலும் ஆகிய இருவகை
ஊழினுள்ளே ஒன்றாக்கும் ஊழின் ஆணையால், பிறப்பு முதலிய பத்தானும்
தலைமகளை ஒத்த தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் காணுதலே
யாகும். தலைவன் பிறப்பு முதலியவற்றான் மேம்பட்டவனாய் இருப்பினும்
நன்று; தலைமகள் அவற்றான் மிக்காளாய் இருத்தல் கூடாது.
நற்குடியில் பிறத்தல், அக்குலத்திற்கு ஏற்ற ஒழுக்கம், ஆளும்தன்மை,
ஆணுக்கும் பெண்ணுக்கும் வரையறுத்த ஆண்டுகள். வடிவம், புணர்ச்சிக்கு
வாயிலாகிய அன்பு, நிறை, அருள், உணர்வு, திரு என்பன அப்பத்துவகை
ஒப்புமைகளாம். ஐயமாவது தலைவியின் வடிவத்தையும் அவளை எதிர்ப்பட்ட
இடத்தையும் நோக்கத் தலைவனுக்கு ஏற்படுவதாம்; தலைவிக்கு ஐயம்
நிகழ்தல் கூடாது. துணிவாவது தலைவிக்குக் கோலம் செய்யப்பட்ட
தொய்யில், அவள் அணிந்த அணிகலன்கள், அவள் அணிதலால் வாடிய
பூக்கள், அவற்றில் படிந்த வண்டுகள், நிலம்தோயும் அவள் அடிகள், பிறழும்
கண்கள், அவளுக்கு நிகழ்ந்த அச்சம், நிழலீடு; வியர்த்தல் முதலியவற்றால்
"இவள் தேவமகள் அல்லள், மானுட மகளே" என்று துணிவதாம். குறிப்
பறிதலாவது தலைவியின் பார்வையினால் அவள் உள்ளத்து நிகழும்
வேட்கையைத் தலைவன் குறிப்பான் அறிதலாம்.