பக்கம் எண் :

 50                            இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     களவு என்னும் ஒழுகலாற்றிற்கு உரிய உள்தலைப்புக்கள்- இயற்கைப்
 புணர்ச்சி, வற்புறுத்தல், தலைவி தெளிதல், பிரிவுழி மகிழ்ச்சி, பிரிவுழிக்
 கலங்கல், இடந்தலைப்பாடு, பாங்கற்கூட்டம், பாங்கிமதி உடன்பாடு,
 பாங்கியின்கூட்டம், பகற்குறி, பகற்குறி இடையீடு, இரவுக்குறி, இரவுக்குறி
 இடையீடு, வரைதல் வேட்கை, வரைவுகடாதல், ஒருவழித்தணத்தல், வரைவு
 இடைவைத்துப் பொருள்வயின் பிரிதல் என்ற பதினேழாம்.

இயற்கைப் புணர்ச்சி

     புலவரால் கூறப்பட்ட இயல்பினானும் கந்தருவ வழக்கத்தோடு ஒத்த
 இயல்பினானும் புணரும் புணர்ச்சி என்பது.

     இது தெய்வத்தான் ஆவது, தலைவியான் ஆவது என இருவகைப்படும்.
 அவற்றுள், தெய்வப் புணர்ச்சியின் விரியாவன-தலைவியைக் கூடியவழி
 மகிழ்தலும், அவள் வனப்பினைப் புகழ்தலும், அவளுக்கு ஆடை அணி
 கலன்களைத் திருத்தி முறைப்பட அணிவித்தலும் என்பனவாம். இதன்கண்,
 தலைவியின் சொல்லைத் தலைவன் கேட்க விரும்புதலும், தன் விருப்பம்கூறி
 அச்சொல் கேளாத அயர்வு நீங்குதலும் அடங்கும். இது தெய்வத்தான்
 நிகழ்ந்த இயற்கைப் புணர்ச்சியின் திறமாம்.

     இனி, தலைவியான் எய்தும் இயற்கைப் புணர்ச்சியின் வகைகளாவன -
 தலைவன் தன் வேட்கை உரைத்தலும், முதற்கண் தலைவி மறுத்தலும், பின்
 உடன்படுதலும், அடுத்துக் கூட்டம் நிகழ்தலும் ஆம்.

     தலைவியான் எய்தும் இயற்கைப் புணர்ச்சியின் விரிகளாவன-தலைவன்
 தலைவியை இரந்துபின்நிற்றற்கு எண்ணுதலும், எண்ணியவாறே அவளை
 இரந்துபின்நிற்றலும், தலைவியைத் தனக்கு முற்படுத்தித் தலைவன் கூறுதலும்,
 வண்டு ஓச்சி மருங்கு அணைந்து தலைவியின் மெய்யைத்