விழிக்கும் சிறுநேரத்தும் என் பிரிவைத் தாங்குதல் இயலாத தலைவியின்
வருத்தத்தை நீ எவ்வாறு போக்கிக்கொண்டிருந்தாய்?]
இவற்றுள், என் பொருட்பிரிவு உரை ஏந்திழைக்கு என்றல் ஆகிய
ஒன்றும் பிரிவு அறிவுறுத்தற்கும்,
பாங்கி நின் பொருட்பிரிவு உரை நீ அவட்கு என்றலாகிய
ஒன்றும் பிரிவு உடன்படாமைக்கும்,
தலைவன் நீடேன் என்று அவன் நீங்கலாகிய ஒன்றும் பிரிவு உடன்
படுத்தற்கும்,
பாங்கி ஓடுஅரிக்கண்ணிக்கு அவன் செலவு உணர்த்தலாகிய ஒன்றும்
பிரிவு உடன்படுதற்கும்,
தலைமகள் இரங்குதலும், கொடுஞ்சொல் சொல்லலும், பருவம் கண்டு
புலம்பலும், மறுத்தலும், தலைமகன் சேண்இடைப்புலம்பலும் ஆகிய ஐந்தும்
பிரிவுழிக் கலங்கற்கும்,
பாங்கி கொடுஞ்சொல் சொல்லலும், வருகுவர் மீண்டு எனப் பாங்கி
வலித்தலும், பருவம் அன்று வம்பு என்றலும், அவர் தூதாகி வந்து
அடைந்தது இப்பொழுது என்றலும் ஆகிய நான்கும் வற்புறுத்தற்கும்,
தலைமகள் ஆற்றலாகிய ஒன்றும் வன்பொறைக்கும்,
தலைமகன் மீண்டு வருகாலைப் பாகனொடு சொல்லலும், மேகமொடு
சொல்லலும் ஆகிய இரண்டும் வருவழிக் கலங்கற்கும்,
பாங்கி வலம்புரி கேட்டு அவன் வரவு அறிவுறுத்தல் முதலாகிய ஐந்தும்
வந்துழி மகிழ்ச்சிக்கும் உரியவாம்.