தலைவனைப் பாங்கன் வியத்தலும், அங்ஙனமே மேதக்காளாகிய தலைவியின்
வடிவுநலன் கண்டு பாங்கன் வியத்தலும், தலைவனிடம் மீண்டு வந்து தலைவி
அவன் வருகையை எதிர்நோக்கி நிற்கும் திறத்தைக் கூறலும், தலைவன்
தன்னை வந்து அடையும் முன்னர் தலைவி "தலைவன் வருவான்
கொல்லோ? வாரான்கொல்லோ" எனக்கவலையோடு நினைத்து நிற்றலும்,
தலைவன் தலைவியின் இருப்பிடம் நோக்கிச்சேறலும், தலைவியைக்
காண்டலும், தலைவியோடு புணர்ச்சியின் மகிழ்தலும், தலைவிநிலையறிந்து
வந்து உரைத்த பாங்கனை மனமார நினைத்தலும், தலைவியைப் புகழ்தலும்,
தலைவியிடம் மறுநாள் அவள் உயிர்த்தோழியோடு அவ்விடம் வருமாறு
கூறலும், தலைவியை அவள் ஆயத்தாரை நோக்கிச் செல்லுமாறு
விடுத்தலுமாம்.
பாங்கிமதி உடன்பாடு
தலைவன் தலைவி ஆகிய இருவரிடையும் அமைந்த நட்பை அறிந்து
பாங்கி அதற்கு உடன்படுதல் என்பது.
பாங்கிமதி உடன்பாட்டின் வகைகளாவன - தலைவியின் உடல் உள்ளம்
செய்கை இவற்றின் வேறுபாட்டால் யாதோ பண்டு நிகழாதது ஒன்று
நிகழ்ந்துள்ளது என்று பாங்கி உணர்தலும், தலைவன் தழையும் கண்ணியும்
கொண்டு பின்னிலை முனியாதுநிற்ப, "இவன் இரந்துபின் நிற்கின்றது
எற்றிற்கோ?" என ஐயுற்று உணர்தலும், தலைவியும் தோழியும் நின்ற
இடத்துத் தலைவன் வந்து பதியும் பெயரும் பிறவும் வினாவவே,
நிகழ்ச்சியைத் துணிந்து உணர்தலும் ஆம்.
பாங்கிமதி உடன்பாட்டின் விரிகளாவன - பாங்கி தலைவியைப்
பலகாலும் உற்றுநோக்கி அவளிடத்துப் புதியனவாகத் தோன்றிய நறுமண
வேறுபாடும், உடல் உறுப்பின் வேறுபாடும், ஒழுக்க வேறுபாடும்,
பண்டையிற் குறைவாக உணவு உண்ணுதலும், தன் செயல்களை மறைத்தலும்
செவிலியிடம் உறங்குதலை விடுத்துத் தனித்துத் துயிலுதலை