ஏறுதல் ஒருதலை என்பதைக் குறிப்பிடுதலும், அதற்கும் நாணத்தால்
மறுமாற்றம் கூறாத தலைவியைத் தோழி சினந்து கூறுதலும் தன்னின்
வேறானவள் அல்லளாகிய தோழி தன்னிடம் இவ்வளவு பேசுதல் வேண்டா;
ஆதலின் அவள் கருத்தே தன்கருத்து; அவ்வாறிருப்பத் தன்னிடம்
அவ்வளவுக்குத் தோழி பேசியது ஏன்என்று தலைவி சினத்தலும், தலைவன்
தோழி வாயிலாகக்கொடுத்த கையுறையைத் தலைவி ஏற்றலும் என்றுகூறிய
இவ்வாறும்;
தலைவி கையுறையை ஏற்றுக்கொண்ட செய்தியைப் பாங்கி
தலைவனுக்கு உணர்த்துதலும், தலைவனிடம் பகற்குறிக்கு ஏற்றஇடத்தைத்
தோழி குறிப்பிட்டுக் கூறலும், அவ்விடத்திற்குத் தலைவியைக்கொண்டு
சேறலும், தலைவியைக் குறியிடத்துச் செலுத்தித் தோழி தான்காரணம் ஒன்று
கூறிப்பிரிந்து நீங்கலும், தலைவன் தலைவியைக் குறியிடத்து எதிர்ப்படுதலும்,
அவளைக் கூடுதலும், அவளைப்புகழ்ந்து பேசுதலும், பின் பாங்கியோடு
கூடுமாறு விடுத்தலும், பாங்கி அந்நேரத்திற்குள் பூமாலை முதலிய
கையுறைகளில் ஒன்று அமைத்துக்கொண்டுவந்து தலைவியைக் காண்டலும்,
தலைவியைப் பாங்கி ஆயத்தாரோடு சேர்த்தலும், பின் ஆயத்தினை நீங்கி
வந்து தலைவனை அணுகித் தலைவியை இறுதிவரை பாதுகாக்கும் பொறுப்பு
அவனுக்கு உரியதாகிய செய்தியைத் தோழி விளம்பலும், தன்இருப்பிடம்
செல்லத்தொடங்கிய தலைவனை நோக்கி "விருந்து உண்டு செல்க" என்று
தோழி செலவு விலக்கலும், தலைவனும் அன்று அவ்வூரில் அவர் மனைக்
கண் விருந்தயர்தலை விரும்புதலும் ஆகிய பதின்மூன்றும் கூட,
அறுபத்தொரு துறைகளாகும்.
பகற்குறி