ஒருவழித்தணத்தலின் வகைகளாமாறு - தலைவன் தலைவியைப் பிரிந்து
ஒன்றிரண்டு நாள்கள் தன்னூருக்குச் செல்லவேண்டியநிலை
ஏற்பட்டுள்ளமையைக் குறிப்பிடுதலும், அதற்குத்தோழி முதற்கண்
உடன்படாமையும், தலைவன் காரணங்காட்டி அவளை உடன்பட
வேண்டுதலும், தோழி தலைவன் செலவுக்கு உடன்படுதலும், தலைவன்
பிரிந்து சென்றவழித்தலைவி கலங்குதலும், தோழி தலைவியைத் தெளிவித்து
அமைதியுறச் செய்தலும், தணந்துவந்த தலைவனிடத்தில் வருந்தி
உரைத்தலும் ஆகிய ஏழுமாம்.
ஒருவழித்தணத்தலின் விரிகளாவன - தலைவன் தன்னூருக்குத்
தான்செல்லவேண்டும் என்பதனைத் தோழிக்குக் கூறலும், தோழி
தலைவனுடைய செலவைத் தலைவியின் ஆற்றாமைகூறி விலக்கலும்,
தலைவன் தான்பிரிந்து செல்ல வேண்டியதன் இன்றியமையாமையைக்
கூறலும், தோழி தலைவனைத் தன்னூர் செல்வதற்கு விடுத்தலும், தோழி
தலைவிக்குத் தலைவன் தன்னூருக்குச்சென்ற செய்தியை இயம்பலும், தலைவி
தலைவன் பிரிவுகுறித்துத் தன்மனத்தோடு நொந்துகூறுதலும், தலைவன்
வருதற்குக் காலம் தாழ்த்தியதனால் காமம்மிகவே மிகவும் நினைந்து
கூறுதலும், தோழி தலைவியை ஆற்றுவித்தலும், பாங்கி ஆற்றுவித்துழித்
தலைவி நெஞ்சு நினைந்து இரங்கலும், நெஞ்சொடுகிளத்தலும், கடலொடு
புலம்பலும், ஆற்றொடு புலம்பலும், புள்ளொடு புலம்பலும், கையறுகிளவி
கூறலும், கூடல்இழைத்தலும், சூளுறவு பொய் என்றலும், தன் அறியாமை
கூறலும், தலைவி தன்னுள்ளே சொல்லுதலும், பின் தலைவன் வந்த
செய்தியைத் தலைவிக்குத் தோழி அறிவித்தலும், தோழி தலைவனிடம்
மனம் வருந்திக் கூறுதலும், தலைவியின் துன்பத்தைத் தான்தணியச்செய்து
கொண்டிருந்த அருமையைத் தோழி தலைவனுக்குக் கூறுதலும் என்று
இருபத்திரண்டாம்.
வரைவிடைவைத்துப் பொருள்வயின் பிரிதல்