பக்கம் எண் :

 80                            இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

 உற்றுழி உதவற்குப் பிரிதல், பொருள்வயின் பிரிதல் என்ற ஏழும்
 கற்பிற்கு உரிய கிளவித்தொகைகளாம்.

     அவற்றுள், இல்வாழ்க்கை என்ற கிளவியின் வகைகளாவன-
 தலைவனுடைய மகிழ்ச்சியும், தலைவியினுடைய மகிழ்ச்சியும், தோழியினுடைய
 மகிழ்ச்சியும், செவிலியினுடைய மகிழ்ச்சியும் என்ற நான்காம்.

     இல்வாழ்க்கையின் விரிகளாவன - தலைவன் தோழியை நோக்கி அவள்
 உதவியினால்தான் தனக்குத் தலைமகளை மணக்கும் வாய்ப்பு ஏற்பட்டமை
 கூறிப் புகழ்தலும், தலைமகனைத் தோழி வாழ்த்துதலும், தலைவனை மணந்து
 கொள்ளும்வரை வருந்தாமல் இருந்ததன் காரணத்தைத் தோழி தலைவியை
 வினாவுதலும், தலைவன் செய்த கருணை தனக்கு இன்பத்தையே அளித்து
 வந்தமையால் தான் வருந்தா திருந்த செய்தியைத் தலைவி தோழிக்குக்
 கூறுதலும், தலைவியை மணந்து கொள்ளும்வரை தலைவன் வருந்தாது
 இருந்ததன் அடிப்படைக் காரணத்தைத் தோழி வினவுதலும், தலைவனும்
 தலைவியும் இல்லறம் நடத்தும் இல்லத்துக்கு வந்த செவிலியிடம் தோழி
 தலைவன் தலைவி இருவருடைய காதல் சிறப்பைக் கூறுதலும், தோழி
 "இருவருடைய நல்லறமும் நன்று" என்று செவிலிக்குக்குறிப்பிடுதலும்,
 ஊர்திரும்பிய செவிலி தலைவியின் கற்பியல் சிறப்புப்பற்றி நற்றாய்க்குக்
 குறப்பிடுதலும், செவிலி தலைவியின் மனைவாழ்க்கையின் சிறப்பினைப்
 பாராட்டிக் கூறலும், செவிலி நற்றாய்க்கு இருவரின் காதலையும்
 குறிப்பிடுதலும் என்ற பத்தும் ஆகும்.

பரத்தையிற் பிரிவு

     பரத்தையின் பிரிவின் வகைகளாவன - பரத்தையிற் பிரிந்து வந்த
 தலைவன் தலைவியை வாயில் வேண்டுதலும், தொடக்கத்தில் தலைவி வாயில்
 மறுத்தலும், தோழி முதலிய வாயில்கள் தலைவியை அமைதியுறுமாறு
 வேண்டலும், தலைவி அதனை ஏற்று ஊடல் நீங்குதலும் என்ற நான்காம்.