பக்கம் எண் :

 அகத்திணையியல் - நூற்செய்தி                               83


 

 அவனுக்குத் தீங்கு விளைவிப்பர் என்று தலைவி கூறுதலும், தலைவன்
 தான் பரத்தை ஒருத்தியையும் அறியாதவன் என்று தன்நேரிய ஒழுக்கம்
 பற்றிப் பேசலும், தலைவனுடைய காமக்கிழத்தியைத் தான் நேரில்கண்ட
 செய்தியைத் தலைவிகூறலும், தலைவியின் ஊடலைத் தோழி தணிக்க
 முயலுதலும், தலைவி தோழி கழறவும் தன்புலவி நீங்காது வெகுளுதலும்,
 தலைமகள் புலவி நீங்காளாகவே தலைவன் வெறுத்து மொழிதலும், தோழி
 தலைவனை அன்பற்ற கொடியவன் என்று இகழ்ந்து கூறலும், இத்தொகுப்
 பிலேயே தலைவி மகற்பெற்றமை தோழி தலைவற்குச் சொல்லி அனுப்புதலும்,
 தலைவன் தன் புதல்வனைக் காண்பதும், பாயலில் தலைவன் வருந்துதலும்,
 விளக்கை அணைத்த விட்டில்பூச்சியை வாழ்த்தலும், பரத்தையர் காதல்
 பரத்தையரைப் புகழ்ந்து தம்மைத்தாமே  இகழ்ந்து கூறிக்கொள்ளுதலும்,
 தலைவி தலைவனோடு புதுப்புனலாடலும், தலைவன் பரத்தையர் யாருடனும்
 தான் புனலாடவில்லை என்று கூறிய வழித் தலைவி அக்கூற்றை மறுத்து
 உரைத்தலும், தலைவி பரத்தையைப் பழித்தலும், தலைவனிடம் தலைவி
 ஊடியவழிக்காமக்கிழத்தி வந்து தலைவியை  வாயில்வேண்டலும், தோழி
 வாயில் நேர்வித்தலும், புதல்வனை வாயிலாகக்கொண்டு தலைவன் இல்லில்
 புகுதலும், தலைவி தன் புதல்வனை வெகுளுதலும், அவனுக்கு முன்னிலை
 மொழியாக அறிவுரை கூறுதலும், புதல்வனைப் பழிப்பதுபோலத்
 தலைவனுடைய குணக் குறைகளை எடுத்துத் தலைவி இயம்பலும் என்பனவும்
 ஆம்.

     புதல்வனும் ஆற்றாமையும் வாயிலாகத் தலைவன் வந்த வழித்தலைவி
 தலைவனை உவந்து எதிர்கோடலும், தலைவன் தலைவியைக்
 கூடிச்சென்றபின் வந்ததோழியோடு, தன்மைந்தனை வாழ்த்தலும், தலைவி
 தலைவனைப்புகழ்தலும், தோழி தலைவியைப் புகழ்தலும் போல்வன,
 உணர்த்த உணரா ஊடலின் ஒழிபாகக் கொள்ளப்படுவனவாம். உணர்த்த
 உணரும் ஊடலும், உணர்ப்புவயின் வாரா ஊடலும், அதன்ஒழிபும்
 பரத்தையிற்பிரிவு என்ற கிளவியின் விளக்கங்களாம்.