ஏனைய பிரிவுகள்
கல்வி முதலிய பிரிவின் வகைகளாவன - தலைவன் பிரிவினை
அறிவுறுத்தலும், தொடக்கத்தில் தலைவி உடன்படாமையும், தோழி
தலைவியை உடன்படுத்தலும், அதனால் தலைவி தலைவன் பிரிவிற்கு
உடன்படுதலும், தலைவன் பிரிந்தவழித் தலைவி கலங்கலும், தோழி
வருந்துதல் கூடாது என்று வற்புறுத்தலும், தலைவி மிக்க பொறுமையோடு
இருத்தலும், பருவங்கண்டு தலைவி கலங்குதலும், தலைவன் பிரிவுமுற்றி
மீண்டு வந்தவழித் தலைவி மகிழ்தலும் என்பனவாம்.
ஒழிபு
அகத்திணையியல் தொடக்கத்திலும், களவு, வரைவு, கற்பு என்ற
தொகுப்புக்களிலும் கூறப்படாத செய்திகள் யாவும் அகத்திணையியல்
இறுதிக்கண் கூறப்படுகின்றன. அகப்பொருள் பன்னிருபகுதிப்பட்டுச்
செய்யுளுக்கு உறுப்பாய் வரும். திணை, கைகோள், கூற்று, கேட்போர்,
இடன், காலம், பயன், முன்னம், மெய்ப்பாடு, எச்சம், பொருள்வகை, துறை
என்பனவே அப்பன்னிரு பகுதிகளாம். இவற்றுள், திணையும் கைகோளும்
முன்பு கூறப்பட்டனவேயாம்; செய்யுளத்து யாதானும் ஒருதிணையும்
ஒருகைகோளும் தவறாமல் உறுப்பாய் வரும்.
கூற்று
இனி பார்ப்பான், பாங்கன், தோழி, செவிலி, கிழவன், கிழத்தி என்ற
அறுவகையோரும் களவுக்காலத்துக் கூற்று நிகழ்த்துவதற்கு உரியர் ஆவர்.
பாணன், கூத்தன், விறலி, பரத்தை, அறிவர், கண்டோர், பார்ப்பான்,
பாங்கன், தோழி, செவிலி, கிழவன், கிழத்தி என்ற பன்னிருவரும்
கற்புக்காலத்துக் கிளவி நிகழ்த்துதற்கு உரியர் ஆவர். ஊரவர், அயலோர்,
சேரியோர், நோயினைக்குறிப்பால் அறிந்தவர், தந்தை, தன்னையர்
என்பவருடைய கூற்றுக்கள் கொண்டு எடுத்துமொழியப்படுவனவேயன்றி
முகத்துரையாக நிகழா.