பக்கம் எண் :

 அகத்திணையியல் - நூற்செய்தி                               85


 

     தலைவியின் நற்றாய் மற்றவரிடம் கூற்று நிகழ்த்துவாளேயன்றித்
 தலைவனோடும் தலைவியோடும் நேர்முகமாகக் கூற்று நிகழ்த்தாள். தலைவி
 தலைவனோடு புணர்ந்து உடன்போயதை உணர்ந்த பிறகு அந்தணர்,
 தெய்வம், அயலோர், அறிஞர், நோயின்திறத்தை நன்கு அறியும் திறத்தினர்,
 செவிலி, பாங்கி, கண்டோர் என்பவரோடு நற்றாய் கூற்று நிகழ்த்துவாள்.
 நற்றாய், தோழி, முதலியவரோடு செவிலித்தாய் கூற்று நிகழ்த்துவாள். தாயர்,
 தோழியர், தலைவன், தலைவி என்பவரோடு வழியிடைக் கண்டோர் கூற்று
 நிகழ்த்துவர். உடன்போயகாலை இடைச்சுரத்துத் தலைவிதமர் தொடர்ந்து
 வரின், அவர் கேட்பச் சுரத்திடைத் தலைமகளோடு செல்லும் தலைவன்
 அவளோடு ஆணையும் கூறுவான். தலைவனோடு உடன்போய் மீண்ட
 தலைவி, கற்புக் காலத்துத் தலைவன் பிரியக் கருதும்வழி, அவன்
 செல்லவேண்டிய நிலத்தின் இயல்பு கூறுங்காலும், தலைவன் தன்னைப்
 பிரிந்துசென்ற வழித் தன் உள்ளத்தோடும் பிறரோடும் வருந்திச்
 சொல்லுங்காலும் கூற்று நிகழ்த்துவாள். பார்ப்பான், பாங்கன், தோழி,
 பாணன், கூத்தன், விறலி, அறிவர் ஆகிய இவர்கள் தலைவனோடும்
 தலைவியோடும் வாய்ப்பு நிகழும் இடத்தெல்லாம் கூற்று நிகழ்த்துவர்.

     காமநுகர்ச்சிக்கு இடையூறு வரும்போது தலைவனும் தலைவியும்
 நெஞ்சினை முன்னிலைப்படுத்திக் கூறுதலும், கேட்குநபோலவும்
 கிளக்குநபோலவும் இயங்குநபோலவும் இயற்றுநபோலவும் அஃறிணை
 மருங்கினும் அறைதலும், மற்றவர் படும்துன்பங்களையும் தம்மைப்போல
 நுகரப்படும் பிரிதல் துன்பமாகக் கொண்டு. கூற்று நிகழ்த்துதலும் உண்டு.
 காமம் இடையீடுபட்டவழிக் கனவு கண்டு கூற்று நிகழ்த்தலும் தலைவனுக்கும்
 தலைவிக்கும் உண்டு. தலைவன் முதலிய அனைவரும் மற்றவரோடு கூற்று
 நிகழ்த்தாது தமக்குள்ளேயே கூறி அமைதி பெறுதலும் உண்டு.