பக்கம் எண் :

 அகத்திணையியல் - நூற்செய்தி                               87


 

 பிறக்கும். இளிவு இழவு அசைவு வறுமை என்ற நான்கும் நிலைக்களமாக
 அழுகை பிறக்கும். மூப்பு பிணி வருத்தம் மென்மை என்ற நான்கும்
 நிலைக்களமாக இளிவரல் பிறக்கும். புதுமை பெருமை சிறுமை ஆக்கம் என்ற
 நான்கும் நிலைக்களமாக வியப்புப் பிறக்கும். அணங்கு விலங்கு கள்வர்
 இறை என்ற நான்கும் நிலைக்களமாக அச்சம் பிறக்கும். கல்வி தறுகண்
 இசைமை கொடை என்ற நான்கும் நிலைக்களமாக வீரம் பிறக்கும்.
 உறுப்பறை குடிகோள் அலை கொலை என்ற நான்கும் நிலைக்களமாக
 வெகுளி பிறக்கும். செல்வம் புலன் புணர்வு விளையாட்டு என்ற நான்கும்
 நிலைக்களமாக உவகை பிறக்கும். ஆக, இந்த எண்வகை மெய்ப்பாட்டின்
 நிலைக்களன்கள் முப்பத்திரண்டாகும். இவையேயன்றி, உடைமை இன்புறல்
 நடுவுநிலை அருளல் தன்மை அடக்கம் வரைதல் அன்பு கைம்மிகல் நலிதல்
 சூழ்ச்சி வாழ்த்தல் நாணுதல் துஞ்சல் அரற்று கனவு முனிதல் நினைதல்
 வெருவுதல் மடிமை கருதல் ஆராய்ச்சி விரைவு உயிர்ப்பு கையாறு இடுக்கண்
 பொச்சாப்பு பொறாமை வியர்த்தல் ஐயம் மிகை நடுக்கு என்ற
 மெய்ப்பாடுகளும் உண்டு. இம்மெய்ப்பாடுகள் அகம் புறம் என்ற
 இரண்டற்கும் பொதுவானவனவாம்.

     அடுத்து, அகத்திற்கே உரிய மெய்ப்பாடுகள் கூறப்படுகின்றன. புகுமுகம்
 புரிதல், பொறிநுதல் வியர்த்தல், நகுநயம் மறைத்தல், சிதைவு பிறர்க்கு
 இன்மை, கூழைவிரித்தல், காது ஒன்றுகளைதல், ஊழ்அணி தைவரல்,
 உடைபெயர்த்து உடுத்தல், அல்குல் தைவரல், அணிந்தவை திருத்தல்,
 இல்வலியுறுத்தல், இருகையும் எடுத்தல் என்ற பன்னிரண்டும் புணர்ச்சிக்கு
 முன்னர் நிகழும் மெய்ப்பாடுகளாம். பாராட்டு எடுத்தல், மடம்தப உரைத்தல்,
 ஈரம்இல் கூற்றம் ஏற்று அலர் நாணுதல், கொடுப்பவை கோடல், தெரிந்து
 உடன் படுதல், திளைப்புவினை மறுத்தல், கரந்தஇடத்து ஒழிதல், கண்டவழி
 உவத்தல், புறம்செய அகத்தே சிதைதல், புலம்பித்தோன்றல், கலங்கி
 மொழிதல், கையறவு உரைத்தல் என்றபன்னிரண்டும் புணர்ச்சிக்குப்பின்
 நிகழ்வனவாம். இவ்விரு பத்து நான்கு மெய்ப்பாடுகளும் களவிற்கே உரியன.
 இவற்றுள் சில சிறுபான்மை கற்பின்கண்ணும் நிகழ்வனவாம்.