இனி, இன்பத்தை வெறுத்தல், துன்பத்துள் புலம்பல், எதிர்பெய்து
பரிதல், ஏதம்ஆய்தல், பசிஅடநிற்றல், பசலை பாய்தல், உண்டியில் குறைதல்,
உடம்புநனி சுருங்கல், கண்துயில் மறுத்தல், கனவொடு மயங்கல்,
பொய்யாக்கோடல், மெய்யே என்றல், ஐயம்செய்தல், அவன்தமர் உவத்தல்,
அறன் அளித்து உரைத்தல், ஆங்குநெஞ்சு அழிதல், எம்மெய் ஆயினும்
ஒப்புமைகோடல், ஒப்புவழி உவத்தல், கலக்கம் என்பன களவிற்குச் சிறந்த
மெய்ப்பாடுகள் ஆயினும் கற்பிற்கும் பயின்று வருவனவாம்.
முட்டுவயின் கழறல், முனிவு மெய்நிறுத்தல், அச்சத்தின் அகறல்,
அவன்புணர்வு மறுத்தல், தூதுமுனிவுஇன்மை, துஞ்சிச்சேர்தல்,
காதல்கைம்மிகல், கட்டுரைஇன்மை, என்ற எட்டும், தலைவியின் வரைதல்
வேட்கையைப் புலப்படுத்தித் தோழி தலைவனைக் களவினை நீத்துத்
தலைவியை வரைந்து கொள்ளுமாறு வேண்டுதற்கு வாய்ப்பாக அமையும்
மெய்ப்பாடுகளாம்.
தெய்வம் அஞ்சல், புரைஅறம் தெளிதல், இல்லது காய்தல், உள்ளது
உவர்த்தல், புணர்ந்துழி உண்மை, பொழுது மறுப்பு ஆக்கம், அருள்மிக
உடைமை, அன்பு தொகநிற்றல், பிரிவுஆற்றாமை, மறைந்தவை உரைத்தல்,
புறஞ்சொல் மாணாக்கிளவி என்ற பதினொன்றும் கற்புக் காலத்திற்கே சிறந்த
மெய்ப்பாடுகளாம்.
நிம்பிரி கொடுமை வியப்பு புறமொழி வன்சொல் பொச்சாப்பு மடிமை
குடிமை இன்புறல் ஏழைமை மறப்பு ஒப்புமை என்ற மெய்ப்பாடுகள்
நற்காமத்திற்கு ஆகாதனவாம்.