இம்மெய்ப்பாடுகள் முழுதும் தொல்காப்பியப் பொருட்படல
மெய்ப்பாட்டியலையும், அதற்குப் பேராசிரியர் வரைந்த உரை
விளக்கங்களையும், மிகப்பெரும்பான்மையும் பின்பற்றியே
குறிக்கப்பட்டுள்ளன.
எச்சம்
செய்யுளுள் வெளிப்படையாகக் கூறப்படாது, வெளிப்படையாகவோ
குறிப்பாகவோ அறிந்து கொள்ளப்பட வேண்டிய செய்தி எச்சம் எனப்படும்.
பொருள் வகை
அகப்பொருளின் ஐந்திணைக்குள்ளும் இன்னதற்கு உரியது என்று
வரையறுத்துக் கூறுதற்கு இயலாது அவ்வைந்திணைக்கும் பொதுவாய்
வரும்செய்தி பொருள்வகை எனப்படும்.
துறை
பல்வேறு வகைப்பட்ட மாவும் மாக்களும் சென்று நீர் உண்ணும்
நீர்த்துறைபோல, பல நிலப் பொருள்களும் ஒரு நிலக் கருப்பொருளாக
மயங்கக் கூறப்படும் இடத்து அந்நிலத்து இயல்பில் பிறழாமல் கொள்ளப்படும்
முறையும், கூறுவோரும் கேட்போரும் இன்றிக் கவி தானே கூறும்
கவிக்கூற்றும் துறை எனப்படும்.
உவமம்
பாடலிலே உவமப் பொருளும், கருப்பொருளோடு நட்புக்கொண்ட
இறைச்சிப்பொருளும் திணையை உணர்தற்கு வாய்ப்பாகச் செய்யுளுள்
கூறப்படும்.
உவமமாவது, உள்ளுறை உவமம் எனவும், வெளிப்படை உவமம்
எனவும் இருவகைப்படும்.