நுகர்ச்சியில் திளைத்தல் - ஆகிய பொருந்தாத்திறமும், தலைவி
இருபத்துநான்காம் மெய்ப்பாட்டினைக் கடந்து ஏழாம் அவத்தை
முதலியவற்றிற்கு உரிய அறிவு அழிகுணன் உடையள் ஆதலும்,
காமமிகுதியானே எதிர்ப்பட்டுழி்த் தலைவன் தலைவியை வலிதின்பற்றிப்
புணர்தலும் ஆகிய நான்கு நிலையும் கந்தருவத்துள் பட்டுப் பின்னர்
வழுவிய பொருந்தாக் காமப்பெருந்திணைக் கூறுகளாகும். பிரமம்,
பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம் என்ற மணங்கள் நான்குமே
பெருந்திணைக்குச் சிறந்தன என்பதும், இந்நான்கும் அத்துணைச் சிறந்தன
அல்ல என்பதும் கொள்ளப்படும்.
பாடல்களிலே பாட்டுடைத்தலைவன் பெயரும் கிளவித் தலைவன்
பெயரும் வரும் கிளவித்தலைவனினும் பாட்டுடைத் தலைவனே
மேம்பட்டவன் ஆவான்.
பாட்டுடைத் தலைவனுக்கு நிலப்பெயர்-வினைப்பெயர் பண்புப்பெயர்-
குலப்பெயர்-இயற்பெயர்-என்ற ஐந்தும் கூறப்பெறும்.
கிளவித்தலைவனுக்கு இயற்பெயர் சுட்டுதல் கூடாது. சுட்டின்பாடல்
புறத்திணையது ஆகும். ஏனைய நான்கு பெயரும் கூறப்பெறும்.
ஒரேபாடலில் பாட்டுடைத் தலைவன், கிளவித்தலைவன் என்ற இருவர்
பெயரும் வருதலும், கிளவித்தலைவன் பெயர் ஒன்றே வருதலும்,
பாட்டுடைத் தலைவன் பெயர் ஒன்றே வருதலும், இருவர் பெயரும் வாராது
நீங்குதலும் உண்டு.
அகப்பாட்டிற்குக் கூறிய இலக்கணங்கள் அகப்புறப்பாட்டிற்கும் ஒக்கும்.
ஆனால் அகப்பாட்டின் இலக்கணம் முழுமையும் அகப்புறப்பாட்டிற்கும்
வருதல் வேண்டும் என்ற யாப்புறவு இன்று. புறத்திணைச்செய்திகள்
முதற்பொருள் வாயிலாகவும், உவமவாயிலாகவும் அகப்பாட்டின்கண்