பக்கம் எண் :

அகத்திணையியல்--நூற்பா எண் 156533

      [இப்பாடல், தலைவி தலைவனோடு உடன் போயினபின் தோழி
செவிலிக்கு அறத்தொடு நின்றாள், நிற்பச் செவிலித்தாய் நற்றாய்க்கு
அறத்தொடுநின்ற துறையைச் சார்ந்தது.

      தோழி! அழகிய வீரக்கழலையும் செயலைமலரையும் வெள்ளிய
வேலினையும் உடைய தலைவனோடு பலவாகத் தொக்க வளைகளை
அணிந்த முன்கையை உடைய உன் மகள் செய்து கொண்ட நட்பானது,
பழைய ஆலமரத்து அடியில் உள்ள பொதுஇடத்தில் தங்கிய
நான்குஊர்களில் உள்ள கோசருடைய நன்மொழி தவறாது உண்மையாவது
போல, முரசு முழங்கவும் சங்கு ஒலிப்பவும் மணம் செய்து கொண்டதால்
உண்மை ஆயிற்று.

      இதனுள், தலைவி குறிஞ்சிநிலத்தாள் ஆதலானும், தலைவன்
பாலைநிலத்தவனாய்த் தலைவியை உடன்போக்கிக் கொண்டு மணம் செய்து
கொண்டதைத் தோழி வாயிலாக உணர்ந்த செவிலி நற்றாய்க்குக்
கூறுகின்றாள் ஆதலானும், கொடுப்போர் இன்றிச் சான்றோர் பிறரைக்
கொண்டு தலைவன் தலைவியை முறைப்படி மணம் செய்து கொண்டான்
என்பது உணரப்படும்.]


விளக்கம்


      இந்நூற்பா விளக்கம் எடுத்துக்காட்டு உட்படத் தொல்காப்பியப்
பொருட்படல 142, 143 ஆம் நூற்பாக்களில் நச்சினார்க்கினியர் உரைத்ததே.


      தொல்காப்பியனார் வரைவு இலக்கணத்தைக் கற்பு என்ற தலைப்புள்
அடக்கினார்.


ஒத்த நூற்பாக்கள்


     ‘கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
     கொளற்குஉரி மரபின் கிழவன் கிழத்தியைக்
     கொடைக்குஉரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே.

தொல். பொ. 142