பக்கம் எண் :

740இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

     ஒருபால் பற்றி ஓதினும் ஏனைய நான்கு பால்களையும் ஏற்ற பெற்றி
கோடல்வேண்டும் ஆதலின், ‘அவர்அவர்’ என்று பலர்பால் பற்றிக்
கூறினும், ஏனைய பால்களையும் கோடல்வேண்டும் என்பது.

‘கைகவியாச் சென்று’-

      வினைமுற்றி மீண்ட தலைமகன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியதாக
அமைந்த ‘கொல்வினைப் பொலிந்த’ என்ற அகநானூற்றுப் பகுதி இது.

      ‘நாணொடு கூடிய கற்பினளாகிய ஒளி பொருந்திய நெற்றியை
உடையளாகிய அழகிய இனியசொற்களை உடைய என் தலைவியின்
மெல்லிய தோள்களைப் பெறுதலை விரும்பி எனக்குமுன் அவளை
நோக்கிச்சென்ற என் நெஞ்சம் சென்று கைகளைக் கவித்துக்கொண்டு அவள்
கண்களைப் பொத்திப் பெண்யானைக் கை போன்ற அவள் கூந்தலைப்பற்றி
அவள்வளையல் அணிந்த கைகளால் தன்னை தடவுமாறு
அவளைத்தழுவிற்றோ?’-என்ற இப்பகுதியில் தலைவன் தன்நெஞ்சினைத்
தன்னைப்போலக் கை கால் முதலிய உறுப்பு உடையதாக உவகை பற்றிக்
கூறியவாறு.

‘உள்ளம் பிணிக்கொண்டோள்’-

     பொருள் முடியாநின்ற தலைமகன் ஆற்றானாகிச் சொற்ற ‘புறந்தாழ்பு
இருண்ட கூந்தல்’ என்ற நற்றிணைப்பாடலில், நெஞ்சம் தன்னைப்
பிணித்துக்கொண்ட தலைவியின் துயரைத் தீர்க்கச் செல்லுதல் வேண்டும்

என்று வற்புறுப்பவும், அறிவு வினைமுற்றியே புறப்படல் வேண்டும் என்று
வற்புறுத்தவும், களிறு இரண்டு இருபாலும் பற்றி ஈர்த்த தேய்புரிப்
பழங்கயிறு போலத் தன்உடல் மெலிதலைத் தெரிவிக்கும் தலைவன்,
தன்நெஞ்சு தன்னிடம் பேசும் உணர்வு உடையது போல, தன் எளியனாம்
நிலையான் ஏற்பட்ட துன்பத்தில் சொற்றவாறு.