பக்கம் எண் :

756இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

 

      மையற விளங்கிய மணிமருள் அவ்வாய் தன்
     மெய்பெறா மழலையின் விளங்குபூண் நனைத்தர’

கலி.81

என்றாற் போல்வது.
 

விளக்கம்
 

    உய்த்துஉணர்வு இன்றித் தலைவரு பொருளின்
    மெய்ப்பட முடிப்பது மெய்ப்பாடு ஆகும்

தொல், பொ. 516

  

என்ற நூற்பாவும், அதற்குப் பேராசிரியர் உரையும் ஈண்டு ஏற்ற பெற்றி
கொள்ளப்பட்டுள்ளன.

    உள்ளத்து உணர்ச்சியை உற்றவர் அறிவிக்காமலே உடம்பின்கண்
நிகழும் வேறுப்பாட்டால் அறிவிக்கும் கருவி மெய்ப்பாடு ஆகும்.
செய்யுளின் மெய்ப்பாட்டு உறுப்பாவது சொற்களைக் கொண்டு பொருளைக்
கண்முன் நிறுத்துவதாம்.

   ‘குற்றமற விளங்கிய செம்மணி போன்ற வாயிலிருந்து மழலையோடு
வரும் எச்சில்நீரிலே மார்பில் அணிந்த அணி கலம் நனைய' என்ற
தொடரால் மழலைமொழி பேசி எச்சில் ஊற, வரும் அழகிய குழந்தை நம்
கண்முன் நிறுத்தப்பட்டது போன்ற எண்ணம் தோன்றுதல் காண்க.

   மெய்ப்பாடு என்பது பொருளைப் புலப்படுத்தற்கு அமைந்ததொரு
செய்யுள் உறுப்பு. அது நகை முதலாக எட்டுவகைப் படுத்திக் கூறப்படும்.
நகை முதலிய ஒவ்வொன்றற்கும் நிலைக்களம் நந்நான்காகவே
மெய்ப்பாட்டின் விரி முப்பத்திரண்டாகும்.

   இம்மெய்ப்பாடுகள் உலக வழக்கில் அகத்தும் புறத்தும் நிகழும்
நிகழ்ச்சிப்பற்றித் தோன்றுவன ஆதலின், இவ்வெண்வகை மெய்ப்பாடுகளும்
அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாக வருவன என்பதும் கொள்க.