பக்கம் எண் :

790இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

 

‘மண்டு அமர்க்கு .... .... சினைஇ’ --

     மறக்குடி மகள் ஒருத்தியின் மகன் போரில் புறமுதுகு இட்டு ஓடினான்
என்று பலர் கூறிய அளவில், தன்மகன் தன் மறக்குடி மரபுக்குக் கேடு

செய்துவிட்டான் என்ற வெகுளி அவளுக்கு ஏற்பட, அவன் போரில்

புறமுதுகுகாட்டி ஓடியிருப்பின் அவன் பால் உண்ட தன் மார்பை அறுத்து
விடுவதாகச் சூள் உரைத்த அவள் கூற்றில், குடிகோள் நிலைக்களனாக
வெகுளி தோன்றியவாறு.

‘வரிவயம் .... .... சினனே’--

     அதியமான் நெடுமான் அஞ்சியின் போர்வீரம் பற்றிப் பாடிய
ஒளவையார்தம் பாடற் பகுதி இது. பகைவரோடு பொருது வென்று ஊர்
திரும்பிய பின்னும் அவனுக்குப் பகைவர்மாட்டு ஏற்பட்ட கோபம்
தணியாமைக்குப் புலியான் துன்புறுத்தப்பட்ட யானை புலியொடு பொருது
அதனை அழித்து மீண்ட பின்னரும் அப்போரை நினைத்துச் சினம்

கொள்ளுதல் உவமமாகக் கூறப்பட்டுள்ளது. இதன்கண், கோல்கொண்டு

அலைத்தல் நிலைக்களனாக வெகுளி பிறந்தவாறு. கோல்--அம்பு.

‘உறுதுப்பு .... .... வேந்தரை’--

     தன்னை இளையவன் என்று எள்ளி நகையாடிய பகைவர் திறம் கண்டு
வெகுண்டு தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் உரைத்த
வஞ்சினப் பாடலின் பகுதி இது.

    ‘தனது மிக்கவலிமைக்கு அஞ்சாது மாறுபடும் சினம் பெருகித் தான்
இளையவன் என்று புல்லிய வார்த்தை கூறிய சினம் பொருந்திய அரசர்’
என்ற இப்பகுதியில், பாண்டியர் பரம்பரையில் வந்த தன் அறிவையும்
புகழையும் கொன்று தன்னை இளையவன் என்று பகைமன்னர்
இழித்துப்பேசியது நிலைக்களனாக வெகுளி தோன்றியது.