[1. பொது]
புறப்பொருளி னியல்பு
599. ஆன்ற காட்சியி னகனன் குணர்ந்தோர்
தோன்றக் கூறிய புறனெனப் படுவ
தறம்பொரு ளென்னு மியல்பிற் றாகிப்
புறம்பயி லொழுக்க மென்மனார் புலவர்.
என்பது நூற்பா. நிறுத்தமுறையானே புறத்திணையிலக்கணம்
உணர்த்திற்றாகலான் இவ்வோத்துப்
புறத்திணையியலென்னும் பெயர்த்து.
மேல் அகத்திணையிலக்கணம் உணர்த்தி அதற்குப்
புறனாகிய
புறத்திணையிலக்கணம் உணர்த்தினமையின் மேலோத்தினோடு
இயைபுடைத்தாயிற்று.
இதனுள் இத் தலைநூற்பா மேற்கூறிய
புறப்பொருளாவது இன்னதென அதன் இயல்பு கூறுகின்றது.
(இ - ள்.) நிறைந்த அறிவானே அகப்பொருளிலக்கணத்தை
ஐயந்திரிபற ஆராய்ந்தறிந்தோர்
விளங்கக்கூறிய புறனென்று சிறப்பித்துச்
சொல்லப்படுவது மேற்கூறிப் போந்த அறமும்
பொருளுமென்று
சொல்லப்படும் இயல்பினையுடைத்தாய்ப் புறம்பே நிகழும் ஒழுக்கமென்று
கூறுவர்
அறிந்தோர், எ - று.
அகம்போல ஒத்த அன்புடையார் தாமேயன்றி எல்லாரானும் துய்த்து
உணரப்படுதலானும், இவ்வாறிருந்ததெனப்
பிறர்க்குக் கூறப்படுதலானும் இது
புறமாயிற்று. எனவே, அறமும் பொருளும் பற்றிப் புறத்தே நிகழும்
ஒழுக்கத்திற்குப் புறமென்றது ஓர் ஆகுபெயராம்.
ஈண்டு,
“ஆன்ற காட்சியி னகனன் குணர்ந்தோர்,
தோன்றக் கூறிய புறனெனப் படுவது”
என்றார், குறிஞ்சி முதலியவற்றிற்கு வெட்சி முதலிய புறனாங்கால் அவ்
விலக்கணங்கள்
ஒருபுடை ஒப்புமைபற்றிச் சார்புடையவாதல்
கூறல்வேண்டுதலின். |