“ஆன்ற சிறப்பி னறம்பொரு ளின்பமென
மூன்றுவகை நுதலிய துலக மவற்று
ளறமு மின்பமு மகலா தாகிப்
புறனெனப் படுவது பொருள்குறித் தன்றே”
எனப் பன்னிருபடலத்துள் அறஞ் சார்பாகப் புறப்பொருள் குறித்து
வருமென்றது என்னையெனின்,
அது மயங்கக்கூறலாம்; ஆசிரியர்
தொல்காப்பியனார் சார்பாகக் கூறாது வாகைத்திணைக்கட்
“கட்டினீத்த பால்”
முதலாகக் “காமநீத்தபால்” ஈறாக* அறத்தையே விதந்து கூறுதலின்.
புறத்திணையின் பெயர், முறை, வகை, விரி
600. வெட்சி வஞ்சி யுழிஞை தும்பை
யுட்குவரு சிறப்பின் வாகையொடு காஞ்சி
பாடாண் டிணையு முளப்படத் தொகைஇ
நாடுங் காலை யெழுவகைத் ததுவே.
இது மேற் புறனெனப்பட்ட பொருட்கு வகையும் விரியும் பெயருங்
கூறுகின்றது.
(இ - ள்.) வெட்சியும் வஞ்சியும் உழிஞையும் தும்பையும் அஞ்சுதக
வரூஉஞ் சிறப்பினையுடைய
வாகையுமாகிய ஐந்திணையுடனே காஞ்சியும்
பாடாணுமாகிய இரண்டு திணையுங் கூடத் தொகுதலால் ஆராயுங்காலத்து
ஏழுகூற்றதாம் மேற்கூறிப்போந்த புறத்திணைதான்,எ-று.
இங்ஙனம் வகுத்தும் விரித்துங் கூறினார், உரிமைவகையால் நிலம்
பெறுவனவாகிய குறிஞ்சி
முல்லை மருதம் நெய்தல் பாலை என்னும்
அகனைந்திணைக்கும் முறையே வெட்சி வஞ்சி உழிஞை
தும்பை
வாகை என்னும் ஐந்தும் புறனாகலானும், நிலனின்றி அந்நிலத்திடை
நிகழும் பெருந்திணையுங்
கைக்கிளையுமாகிய அகத்திணை
இரண்டற்கும் முறையே காஞ்சி பாடாண் என்னும் இரண்டு திணையும்
புறனாகலானும் என்பது. அகங்கை இரண்டுடையார்க்குப் புறங்கை
நான்காகாது இரண்டாகியவாறுபோல
அகத்திணை ஏழென்றார்க்குப்
புறத்திணை ஏழென்றலே பொருத்த முடைத்தென்பார், ஈண்டு
‘நாடுங்காலை
யெழுவகைத்து’ என்றார். எனவே, அகத்திணைக்குப் புறத்திணை
அவ்வந்நிலத்து மக்கள்
வகையாற் பிறந்த செய்கை வேற்றுமையாகலின்
ஒன்றற்கொன்று இன்றியமையாதவாறாயிற்று.
இக்குறிகள் காரணக்குறிகளாம் பூக்களாற் போந்தனவாகலின்: அற்றேல்,
* தொல். பொ. புறத். 17 : 16-23 |