பக்கம் எண் :

இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [சிறப்பு]5


   புறத்திணை பலவற்றுள் ‘வெட்சி தானே குறிஞ்சியது புறனே’ என
இதனைப் பிரித்து ஓதினார், களவொழுக்கமும் மலைசார்ந்த இடனுங் கங்குற்
காலமும் அந்நிலத்துப் பூவாகிய வெட்சிசூடலுங் காவலர் கடுகினுந்
தாங்கருதிய பொருளை இரவின்கண் முடித்து மீடலும் போல்வன ஒத்தலின்
என்பது. எனவே, வெட்சித்திணை குறிஞ்சித் திணைக்குப் புறனென்றல்
ஆணைகூறலன்றாயிற்று. மன்னுயிர்காக்கும் அன்புடை வேந்தர்க்கு
மறத்துறையும் அறமே நிகழு மாதலின், ஈண்டு, ‘உட்குவரப் பொருபோ
ருறுமுறை தொடங்கிய, வேந்து’ என்றார். உறுமுறைதொடங்கலாவது;-
இருபெருவேந்தர் பொருவது கருதியக்கால், ஒருவர், ஒருவர் நாட்டு வாழும்
அந்தணரும் ஆவும் முதலியன தீங்குசெயத் தகாத சாதிகளாதலின் அவற்றை
ஆண்டுநின்றும் அகற்றல் வேண்டிப்போதருக எனப் புகறலும், அங்ஙனம்
போதருதற்கு அறிவில்லாத ஆவினைக் களவினால் தாமே கொண்டுவந்து
மீளாமற் பாதுகாத்தலும் முதலியனவாம். அஃது,


     
 “ஆவு மானியற் பார்ப்பன மாக்களும்
       பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
       தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
       பொன்போற் புதல்வற் பெறாஅ தீரு
       மெம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென
       வறத்தாறு நுவலும் பூட்கை மறத்தின்” [புறம். 9]

எனச் சான்றோர் கூறியவாற்றான் உணர்க. மேல் ஊர்கொலையுங் கூறுவர்,
அகநாட்டின்றிப் புறஞ்சிறைப்பாடியில் ஆநிரைகாக்குங் காவலரைக் கொன்றே
நிரைகொள்ளவேண்டுதலின். இக் களவொழுக்கந் தீதெனப் படாது அறமேயா
மென்பார், ஈண்டு ‘ஆதந்தோம்பலும்’ என்றார். எனவே, புறப்பொருட்குரிய
அறனும் பொருளுங் கூறத்தொடங்கி ஈண்டு அறத்தாற் பொருளீட்டுமாறுங்
கூறினார். ‘ஆதந்தோம்பலும் அந்நிரைமீட்டலுமென இருபாற்று’ என்னாது,

        
“தன்னுறு தொழிலே வேந்துறு தொழிலென்
         றன்னவிரு வகைத்தே வெட்சி”

எனப்
பன்னிருபடலத்துட் கூறியவாறு கூறின் முன்வருகின்ற வஞ்சி
முதலியவற்றின் பொருளாகிய எடுத்துச்செலவு முதலியன வேந்தன்மேல்
இயன்றுவருதலானும் வேந்துறுதொழிலே யன்றித் தன்னுறுதொழிலுங் கூறின்
வேந்தனது ஆணையைக்கடந்து தன்னாட்டும் பிறனாட்டுங் களவு
நிகழ்த்தினாராபவாகலானும் அது மரபன்றென மறுக்க. (4)