பக்கம் எண் :

இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [சிறப்பு]7


அவற்றுட்,
படையைக்கூய்வருக என்றற்குச் செய்யுள்:-

      “கடிமனைச் சீறூர்க் கடுங்கட் கறவை
      வடிநவில் வேலான் மறித்தோம்ப லொட்டா
      னடிபுனை தோலி னரண்சேர்ந்து மள்ளர்
      வருகமன் வாயிற் கடை” [தொல். புறத். 3 நச்.]

எனவரும். ஏனையவற்றிற்கும் வந்துழிக் காண்க.

1. மண்டமர்க்கிவர்ந்தோன் மருவலர் நிரையினைத் தண்டத் தலைவரைத் தருகெனப் பணித்தற்குச் செய்யுள்:-

   “மண்டு மெரியுண் மரந்தடிந் திட்டற்றாக்
    கொண்ட கொடுஞ்சிலையான் கோறெரியக்-கண்டே
    யடையார் முனையலற வையிலைவேற் காளை
    விடையாயங் கொள்கென்றான் வேந்து” [பு. வெ. வெட்சி. 1]

எனவரும். இதனைத் திணைப்பாட்டென்பாரும் உளர். திணைப்பாட்டாயின்
அத் திணைக்கட் கூறுந் துறையெல்லாம் அகப்படத் தழீஇ வருதல்வேண்டும்.
அங்ஙனம் வாராது வேந்தன் தண்டத்தலைவரை நிரைகவர்க என
ஒருதொழிலே குறித்துவந்தமையிற் துறைப்பாட்டே யாவதல்லது திணைப்
பாட்டாகாதென மறுக்க. மேல் இங்ஙனம் வருவனவற்றிற்கெல்லாம் இக்
கடாவிடை உய்த்துரைத்துக் கொள்க.

2.
பணிதலைக்கோடற்குச் செய்யுள்:-

   
“அறாஅநிலைச் சாடி யாடுறு தேறன்
     மறாஅன் மழைத்தடங் கண்ணி-பொறாஅன்
     கடுங்கண் மறவன் கழல்புனைந்தான் காலை
     நெடுங்கடைய நேரார் நிரை” [பு. வெ. வெட்சி. 2]

எனவரும். பொறாஅனென்பதற்கு அரசனேவுதலாற் பாணித்த
லிலனாகியெனப் பொருளுரைத்துக்கொள்க. தன்னுறுதொழிலும் உளதென்று
கொண்டார் அதற்கும் இப் பாட்டினையே காட்டிப்பொறா அனென்பதற்குத்
தனிசுபொறானென்று உரைப்ப.

3.
படையியங்கரவத்திற்குச் செய்யுள்:-

    “நெடிபடு கானத்து நீள்வேன் மறவ
     ரடிபடுத் தாரதர் செல்வான்-றுடிபடுத்து
     வெட்சி மலைய விரவார் மணிநிரைக்
     கட்சியுட் காரி கலுழ்ம்” [பு. வெ. வெட்சி. 3]
 

எனவரும்.