4.
தணியலரெழுந்தோர் சமரவாய்ப்பறீஇயர் விரிச்சியோர்த்தற்குச்
செய்யுள்:-
“எழுவணி சீறூ ரிருண்மாலை முன்றிற்
குழுவினங் கைகூப்பி நிற்பத்-தொழுவிற்
குடக்கணீ கொண்டுவா வென்றாள் குனிவிற்
றடக்கையாய் வென்றி தரும்” [பு. வெ. வெட்சி. 4]
எனவரும். அரசனேவலாற் போந்தோர்க்கு விரிச்சியோர்த்தல்
இயல்வதன்றேனும் இன்னஞான்று
வினைவாய்க்குமென்று அறிதற்பொருட்டு
இயலுமென்பார் ‘சமரவாய்ப்பறீஇயர் விரிச்சியோர்த்த’
லென்றார்.
5.
வேண்டாவீரத்திற்குச் செய்யுள்:-
நேரிசை யாசிரியப்பா
“நாளும் புள்ளுங் கேளா வூக்கமொ
டெங்கோ னேயின னாதலின் யாமத்துச்
செங்கால் வெட்சியுந் தினையுந் தூஉய்
மறிக்குரற் குருதி மன்றுதுக ளவிப்ப
விரிச்சி யோர்த்தல் வேண்டா
வெயிற்புறந் தருதும்யாம் பகைப்புல நிரையே”
[தகடூர். புறத். 1241]
எனவரும்.
6.
வரிச்சிலைமறவர் வழியிடைச் சேறற்குச் செய்யுள்:-
“கூற்றினத் தன்னார் கொடுவி லிடனேந்திப்
பாற்றினம் பின்படர முன்படர்ந்-தேற்றின
நின்ற நிலைகருதி யேகினார் நீள்கழைய
குன்றங் கொடுவில் லவர்” [பு. வெ. வெட்சி. 5]
எனவரும்.
7.
ஒற்றினாகிய வேய்க்குச் செய்யுள்:-
“நிலையு நிரையு நிரைப்புறத்து நின்ற
சிலையுஞ் செருமுனையுள் வைகி-யிலைபுனைந்த
கள்ளவிழ் கண்ணிக் கழல்வெய்யோய் சென்றறிந்து
நள்ளிருட்கண் வந்தார் நமர்”
[பு. வெ. வெட்சி. 6]
எனவரும். ஒற்றினாகியவேய், ஒற்றுகையான் உணர்த்திய குறளைச் சொல். |