பக்கம் எண் :

இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [எச்சம்]93

 

     18. பல்லிதழ்மழைக்கட் பாலகன் மாய்ந்தெனப் புல்லிய
பெருங்கிளைப் பூசல்மயக்கத்திற்குச்
செய்யுள்:-

    
"அலர்முலை யஞ்சொ *லவளொழிய வவ்விற்
     குலமுதலைக் கொண்டொளித்த லன்றி-நிலமுறப்
     புல்லிய பல்கிளைப் பூசல் பரியுமோ
     கொல்லிய வந்தொழியாக் கூற்று"
          [பு. வெ. சி. பொது. 6]

எனவரும்.

    
19. வேந்தன்மாய்ந்தென வியலிடம்புலம்பிய ஆய்ந்த அத்துறைப்
பகுதிக்குச்
செய்யுள்:-

    
"எண்ணி னிகல்புரிந்தோ தெய்தாத தில்போலுங்
     கண்ணினொளிர் வேலான் கரந்தபி-னண்ணல்
     புகழொடு பூசன் மயங்கிற்றாற் பொங்கு
     மகழ்கடல் வேலி யகத்து"
                  [பு. வெ. சி. பொது. 7]

எனவரும்.

    
20. ஈமத்து நல்லோள் கணவனொடு நளியழற்புகீஇச்
சொல்லிடையிட்ட மாலைநிலைக்குச்
செய்யுள்:-

    
"சோலைமயி லன்னா டன்கணவன் சொல்லியசொல்
     மாலை நினையா மனங்கடைஇக்-காலைப்
     புகையழல் வேலோன் புணர்ப்பாகி நின்றா
     ளகையழ லீமத் தகத்து"
                   [பு. வெ. சி. பொது. 8]

எனவரும். இதனைப் பாலையென்று பாடமோதுவாரும் உளர்; அது பாடமன்மை
உரையாசிரியர் உரையானும்மாலையீடென்னும் வழக்கானும் உணர்க.

    
21. கணவனொடுமுடிந்த படர்ச்சிநோக்கிச் செல்வோர் செப்பிய
மூதானந்தத்துக்குச்
செய்யுள்:-

    
"ஓருயி ராக வுணர்க வுடன்கலந்தார்க்
     கீருயி ரென்ப ரிடைதெரியார்-போரில்
     விடனேந்து வேலாற்கும் வெள்வளையி னாட்கு
     முடனே யுலந்த துயிர்"
                  [பு. வெ. சி. பொது. 9] 

எனவரும். ஆனந்தம் - சாக்காடு. மூதானந்தமென்றார் உழுவலன் பற்றி
இறத்தலின்.

  
(பா - ம்.) * லவணொழிய.