பக்கம் எண் :

 10

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

 வெளிப்படுப்பணி, வஞ்சநவிற்சியணி, குறிப்பு நவிற்சியணி, வெளிப்படை நவிற்சியணி,
 யுக்தியணி, உலகவழக்கு நவிற்சியணி, வல்லோர் நவிற்சியணி, மடங்குதல் நவிற்சியணி,
 நிகழ்வின் நவிற்சியணி, மிகுதி நவிற்சியணி, விதியணி என்பன காணப்படுகின்றன.
 இவற்றுள் பல தன்மையணி, ஒட்டணி, அதிசயவணி, சுவையணி என்பனவற்றுள்
 அடங்கும்.

     குவலாயனந்தத்துள் சந்திராலோகம் கூறும் அணி வகைகளோடு, சுவையணி
 (தண்டியலங்காரம், மாறனலங்காரம் முதலியன குறிப்பிடுவது) கருத்தணி, வன்மையணி,
 சேர்க்கையணி, பாவகற்தோற்ற அணி, பாவகச் சேர்க்கையணி, பாவகக் கலவையணி,
 காட்சியளவையணி, கருதல் அளவையணி, ஒப்பளவையணி, சொல்லளவையணி,
 பொருட்பேற்றளவையணி, நுகர்ச்சியின்மையணி, பிறப்பளவையணி,
 எடுத்துக்காட்டளவையணி, சேர்வையணி, உறுப்பு உறுப்பிக்கலவையணி, இருசிறப்புக்
 கலவையணி, ஐயக்கலவையணி, ஒருசொல்லணுகி விளக்கும் கலவையணி என்ற இருபது
 அணிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை சுவை அணி, ஏதுஅணி, சங்கீரண அணி,
 சங்கர அணி என்பனவற்றின் விரிவுகளே. ஆதலின் இவற்றைத் தனித்தனிக் காண்டல்
 வேண்டா.

     முத்துவீரிய அணியதிகாரம் - தண்டியலங்காரம் குறிப்பிடும் அணிகள் 29- ஐயும்,
 சந்திராலோகம் குறிப்பிடும் ஏனைய 27 அணிகளையும் குறிப்பிட்டுள்ளது.

     இவற்றை நோக்க, வகைகளைவிடுத்து, பொருள் அணிகள் 120 இன்று காணப்படும்
 அணிநூல்கள் வாயிலாக உணர்த்தப்படுகின்றன.

     இனிச் சொல்லணிகள் மடக்கும் சித்திரகவியுமாம். சித்திர கவிகள்
 தண்டியலங்காரத்தில் பொருளணியை அடுத்துக் கோமூத்திரிகை, கூடசதுர்த்தம்,
 மாலைமாற்று, எழுத்து வருத்தனம், நாகபந்தம், வினாஉத்தரம், காதைகரப்பு,
 கரந்துறைச் செய்யுள், சக்கரம், சுழிகுளம், சருப்பதோபத்திரம், அக்கரச்சுதகம்,
 நிரோட்டம், ஒற்றப்பெயர்த்தல், மாத்திரைச்சுருக்கம், மாத்திரைப்பெருக்கம், முரசபந்தம்,
 திரிபாகி, திரிபங்கி, பிறிதுபடுபாட்டு என்ற இருபது வகைகளாகச் சுட்டப்பட்டுள்ளன.