இலக்கணவிளக்கமும் அவற்றையே சுட்டுகிறது. மாறன் அலங்காரத்துள், வல்லினப்
பாடல், மெல்லினப்பாடல், இடையினப்பாடல், நிரோட்டியஓட்டியம், ஓட்டிய
நீரோட்டியம், பதுமபந்தம்,இரதபந்தம், எழுகூற்றிருக்கை என்பனவும்
குறிப்பிடப்பட்டுள்ளன. வீரசோழிய உரையுள், யாப்பருங்கலவிருத்தி குறிப்பிட்டுள்ள
தூசங்கொளல், வாவல்ஞாற்று, பாதமயக்கு,பாவில்புணர்ப்பு, ஒருபொருட்பாட்டு,
சித்திரப்பா, விகற்பநடை என்பனவும் எடுத்துக்காட்டின்றி விளக்கப்பட்டுள்ளன. இவற்றுள், இலக்கணவிளக்க அணியியல் இயம்பும் அணிவகைகள் பற்றி ஏனைய
நூல்கள் இயம்பும் செய்திகள் அவ்வவ்வணியின் இறுதியில் உரைவிளக்கமாக
வரையப்பட்டுள்ளன. இலக்கணவிளக்க அணியியலுள் குறிப்பிடப்படாத ஏனைய
நூற்செய்திகள் யாவும் பிற்சேர்க்கையாக உள்ளன.
அணியியல் - அமைப்பு
அணி எனப்படுவது குணம் என்றும் அலங்காரம் என்றும் இரண்டு
வகையினையுடையதாய்ப் பொருளதிகாரத்தின் முதல் இரண்டு இயல்களிலும்
கூறப்பட்டுள்ள அகப்பொருளையும் புறப்பொருளையும் விளக்குவதாகும்.
அவ்வகப்பொருள் புறப்பொருள் என்ற இரண்டற்கும் இடம் செய்யுள் ஆதலின்,
அச்செய்யுளை விளக்கி நிற்பதும் அவ்வணியினுடைய இயல்பாகும்.
செய்யுள் என்பவை முத்தகம், குளகம், தொகைநிலை, தொடாநிலை என்ற நான்கு
வகையினவாகும்.
முத்தகச்செய்யுள் ஒரேபாடலில் பொருள்முற்றி நிற்பதாகும். குளகச்செய்யுள்
தொடர்ந்து பல பாடல்களில் பொருள் புலப்படுத்தப்படுவதால் அப் பல பாடல்களும்
ஒரே முடிக்குஞ்சொற் கொண்டு பொருள் முற்றுப்பெறும்.
தொகைநிலைச்செய்யுள் தனி ஒருவனாலோ பலராலோ பாடப்பட்டுப் பொருள்
இடம் காலம் தொழில் பாட்டு அளவு என்பன பற்றித் தொகுக்கப்படும் செய்யுள்
தொகுதியாகும்.