தொடர்நிலைச் செய்யுள் பொருள்தொடர்நிலை, சொல்தொடர் நிலை என்ற
இருவகைப்படும். பொருள் தொடர்நிலைச் செய்யுள், பெருங்காப்பியம் என்றும் காப்பியம் என்றும்
இருவகைப்படும். அவற்றுள் பெருங்காப்பியம் என்பது, வாழ்த்து வணக்கம்
வருபொருள் இவற்றில் ஏற்பன முற்கொண்டு, அறம் பொருள் இன்பம் வீடு என்ற
உறுதிப்பொருள் நான்கனையும் சுட்டி, ஒப்புயர்வற்ற தலைவனை உடையதாய், மலை
- கடல் - நாடு - ஊர் - பருவம் - கதிரவன் உதயம் - மதியத்தின் உதயம் முதலிய
வருணனைகளை உடையதாய், திருமணம் - முடிசூட்டு விழா - பொழில் விளையாடல்
- புனல் விளையாட்-கள்ளாட்டு - புதல்வர்ப் பயத்தல் - புலவியில் புலத்தல்
- கலவியில் களித்தல் முதலியனவற்றை விளக்கி, மந்திராலோசனை - தூது -
போர்மேற் சேறல் - செரு விளைத்தல் - வெற்றி பெறுதல் ஆகிய செய்திகளைக்
குறிப்பிட்டு, சருக்கம் இலம்பகம் பரிச்சேதம் முதலிய உட்பிரிவுகளை உடையதாகி,
எண்வகைச் சுவையும் மெய்ப்பாடும் கேட்போர் எய்துமாறு நன்மக்களால்
பொருள்தொடர்பு வரப் பாடப்படுவதாகும். பெருங்காப்பியத்தில் முற்கூறப்பட்ட
செய்திகளில் நால்வகை உறுதிப்பொருள் நீங்கலாக ஏனைய செய்திகள் சில குறைந்தும்
வரலாம். அறம் முதலிய நான்கு உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ
குறைந்துவரப் பாடப்படுவது சிறுகாப்பியம் என்றும் காப்பியம் என்றும் கூறப்படும்.
அவை ஒரே வகைப்பட்ட பாடலானும் பலவகைப்பட்ட பாடலானும் பாடப்பெறும்.
இடையிடையே உரைநடையும், வேற்று மொழியும் விரவி வருதலும் உண்டு.
சொற்றொடர்நிலைச் செய்யுள், பொருள் தொடர்பற்ற பல செய்யுட்கள் அந்தாதித்
தொடையால் சொல் தொடர்புறப் பாடப்பெறும் தொகுப்பாகும்.
செய்யுட் குணத்தை வைதருப்பம் என்றும் கௌடம் என்றும் இரு வகையாகச்
சான்றோர்கொண்டுள்ளனர். அவற்றுள் வைதருப்ப நெறி - நெகிழிசை இல்லாச் செறிவு,
பொருளைப் புலப்படுத்தும் தெளிவு, வன்மை மென்மை இடைமை விரவத் தொடுக்கும்
சமநிலை, சொல்லான் செவிக்கின்பமும் பொருளான் மனத்திற்கு இன்பமும் மிகுமாறு
பாடப்படும் இன்பம், செவிக்கு இன்னா ஓசை பயவாத ஒழுகிசை, வெளிப்படையாகக்
கூறாது குறிப்பாக ஒரு பொருளைக் கொள்ளவைக்கும் உதாரம், கருதிய