பக்கம் எண் :

 அணியியல் - முன்னுரை

13 

     பொருளைத் தெளிவாக விளக்குதற்குரிய சொற்களைச் செய்யுளில் அமைத்துப்
 பாடும் உய்த்தலில் பொருண்மை, உலக நடையைக் கடவாது அளவே வருணித்துப்
 பாடும் காந்தம், தொகைச் சொற்றொடர் மிகுதியாக வருமாறு பாடும் வலி, ஒரு
 பொருளின் தொழிலே அதனோடு ஒப்புடைய பொருளுக்கு அமைத்துப் பாடும் சமாதி
 எனப் பத்து வகைப்படும்.

     கௌட நெறியாவது வைதருப்ப நெறி கூறும் பத்துக் குணங்களோடும் ஒத்து
 வாராது சிலவற்றுடனேயே ஒத்து வருவதாகும். அவையாவன பொருள்இன்பம்,
 உதாரம், சமாதி என்பனவாம்.

     அலங்காரம் - பொருளணி எனவும் சொல்லணி எனவும் இருவகைப்படும்.

     பொருளணி - தன்மை, உவமை, உருவகம், தீவகம், பின்வருநிலை,
 முன்னவிலக்கு, வேற்றுப் பொருள் வைப்பு, வேற்றுமை, விபாவனை, ஒட்டு, அதிசயம்,
 தற்குறிப்பேற்றம், ஏது,நுட்பம், இலேசம், நிரல்நிறை, ஆர்வமொழி, சுவை, தன்
 மேம்பாட்டுரை, பரியாயம், சமாயிதம், உதாத்தம், அவநுதி, சிலேடை, விசேடம்,
 ஒப்புமைக்கூட்டம், விரோதம், மாறுபடு புகழ்நிலை, புகழாப் புகழ்ச்சி, நிதரிசனம்,
 புணர்நிலை, பரிவருத்தனை, வாழ்த்து, சங்கீரணம், பாவிகம் என்று முப்பத்தைந்து
 வகைப்படும்.

     அறம் பொருள் இன்பம் வீடு என்ற நால்வகைப்பட்ட பொருளையும் உள்ளவாறு
 விளக்கிப் பாடும் தன்மையணி, பொருள் குணம் சாதி தொழில் என்ற நான்கனையும்
 நிலைக்களமாகக் கொண்டு தோன்றும்.

      பண்பு தொழில் பயன் என்ற மூன்றனுள் ஒன்றனையோ பலவற்றையோ
 காரணமாகக் கொண்டு, ஒன்றாகியும் பலவாகியும் வரும் பொருளோடு
 பொருள் இயைய வைத்து ஒப்புமை தோன்றக் கூறுவது உவமை அணியாம். அதன்
 செய்திகள் பலவற்றையும் தொல்காப்பியம் முதலிய பெருநூல்களான் உணரலாம்.
 அவ்வுவமையணி - பண்பு முதலியன வெளிப்பட அமைக்கும் விரிஉவமை, பண்பு
 முதலாயின தொகுத்து அமைக்கும் தொகை உவமை, உபமானத்தை உபமேயமாகவும்
 உபமேயத்தை